எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டை அழிக்க விடமாட்டோம் -ராகுல் காந்தி உறுதி


எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டை அழிக்க விடமாட்டோம்   -ராகுல் காந்தி உறுதி
x
தினத்தந்தி 11 Feb 2020 4:35 AM IST (Updated: 11 Feb 2020 4:36 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.சி., எஸ்.டி. சமுதாயத்தினருக்கான வேலை மற்றும் பதவி உயர்வில் உள்ள இடஒதுக்கீட்டை அழிக்க விடமாட்டோம் என்று ராகுல் காந்தி கூறினார்.

புதுடெல்லி,

உத்தரகாண்ட் மாநில அரசு தொடர்ந்த வழக்கில், ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்கு (எஸ்.சி., எஸ்.டி.) வேலை, பதவி உயர்வு ஆகியவற்றில் இடஒதுக்கீடு வழங்குவது கட்டாயம் இல்லை, இது அடிப்படை உரிமையும் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ராகுல் காந்தி கூறியதாவது:-

ஒழித்துவிட முயற்சி

தலித்துகள், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா ஆகியவை ஒருபோதும் ஆதரிக்காது. இது அவர்களின் ரத்தத்தில் ஊறியது. அவர்கள் தினமும் காலையில் எழுந்ததும் இந்த பிரச்சினை அவர்களை எரிச்சல் படுத்துகிறது.

இது நமது அரசியல்சாசனத்தில் இல்லையே தவிர, இந்த உரிமைகளுக்கு அரசியல்சாசனம் உத்தரவாதம் அளித்துள்ளது. அவர்கள் ஏதாவது ஒரு வழியில் இடஒதுக்கீட்டை ஒழித்துவிட முயற்சித்து வருகிறார்கள். ரவிதாஸ் கோவிலுக்கு என்ன செய்தார்கள் என்பதையும், எஸ்.சி., எஸ்.டி. துணை திட்டங்கள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதையும் நீங்கள் பார்த்தீர்கள்.

அழிக்க விடமாட்டோம்

இடஒதுக்கீடு வழங்குவது அடிப்படை உரிமை இல்லை என்று அவர்கள் வாதாடியதை நீங்கள் பார்த்தீர்கள். எனவே இடஒதுக்கீட்டை அழிக்கும் எண்ணம் அவர்களது மரபணுவிலேயே உள்ளது.

இடஒதுக்கீட்டுக்கு முடிவுகட்டுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம், இடஒதுக்கீட்டை அழிக்க விடமாட்டோம் என்று தலித், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களில் உள்ள நண்பர்களுக்கு சொல்ல விரும்புகிறேன். இதுபற்றி பிரதமர் மோடியோ, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தோ எவ்வளவு முயற்சித்தாலும் அதுபற்றி கவலையில்லை.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
1 More update

Next Story