காங்கிரசில் என்ன தான் நடக்கிறது...? ராகுல்காந்தி தலைவராவாரா...? மாட்டாரா...?


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 22 Feb 2020 12:17 PM GMT (Updated: 22 Feb 2020 12:17 PM GMT)

காங்கிரஸ் தலைவர் பதவி குறித்து தலைமை காங்கிரசுக்குள் பல மூத்த தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

புதுடெல்லி,  

நாடாளுமன்ற தேர்தல், காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சோதனையாக அமைந்து விட்டது. அந்தக் கட்சி 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, முக்கிய எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட தொடர்ந்து 2-வது முறையாக பெற முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டது.

கட்சி தலைவர் ராகுல் காந்தி, தனது சொந்த தொகுதியான அமேதியை தக்க வைக்க முடியாத பரிதாப நிலை ஏற்பட்டது. வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவிய பின்னர் காங்கிரஸ்  கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். இதற்கான கடிதத்தையும் கட்சியின் தலைமையிடம் ஒப்படைத்துள்ளார்.  ஆனால் அவர் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற்று கட்சியின் பதவியில் தொடரவேண்டும் என கட்சியின் பல்வேறு மட்டத்தில்  வலியுறுத்தப்பட்டு வருகிறது. 

இதையடுத்து தலைவராக யாரும் பொறுப்பு ஏற்க முன்வராததால், இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி நியமிக்கபட்டார். தலைவர் பதவியில் விறுவிறுப்பாக செயல்பட அவரது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டிய நிலை காங்கிரசுக்கு உள்ளது

ராகுல்காந்தியை மீண்டும் தலைவராக்க வேண்டும் என்று கடந்த சில தினங்களாக கோரிக்கை எழுந்துள்ளது. சில மாநில தலைவர்கள் ராகுலை உடனே தலைவராக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அறிக்கை விடுத்துள்ளனர். இதனால் ராகுல் மீண்டும் தலைவர் ஆகக்கூடும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே ராகுலை மீண்டும் தலைவராக்க காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒரு சாரார் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.  ராகுல் தலைமையில் மீண்டும் தேர்தலை சந்தித்தால் தோல்விதான் ஏற்படும் என்று கூறி உள்ளனர். குறிப்பாக இளம் தலைவர்களிடையே ராகுலுக்கு எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. மோடிக்கு சவால் விடும் வகையில் ராகுலின் செயல்பாடுகள் இல்லை என்று சில மூத்த தலைவர்கள் மறைமுக எதிர்ப்பை வெளிப்படுத்தி உஷீமீளனர்.

ராகுல் காந்தியை  சுற்றி இருப்பவர்கள் அவரை தவறான பாதையில் வழி நடத்துவதாகவும், சில மூத்த தலைவர்களிடம் அதிருப்தி நிலவுகிறது. அந்த தவறான நபர்கள்மூலம் ராகுலுக்கு வீழ்ச்சிதான் ஏற்படும் என்றும் அந்த காங்கிரஸ் தலைவர்கள் எச்சரித்துள்ளனர். 

ராகுல் மீண்டும் தலைவராக கட்சிக்குள்  திடீர் எதிர்ப்பு உருவாகி இருப்பது சோனியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் மீது அதிருப்தியில் இருப்பவர்களை சமரசம் செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. 

காங்கிரஸ் தலைவர் பதவி குறித்து   காங்கிரசுக்குள் சசி தரூர் மற்றும் சந்தீப் தீட்சித் உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

சசி தரூர் கடந்த வியாழக்கிழமை காங்கிரஸ் செயற்குழு தொண்டர்களை  உற்சாகப்படுத்துவதற்கும் வாக்காளர்களை ஊக்குவிப்பதற்கும் தலைமைக்கான தேர்தலை  நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இது குறித்து காங்கிரஸ்  மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்  கூறியதாவது:-

காங்கிரசுக்குள் ஒரு பெரிய பிரிவு எப்போதுமே ராகுல் காந்தி மீண்டும் கட்சித் தலைவராக வர வேண்டும் என்று விரும்புகிறது. அவர் கட்சியில் "உயர்மட்ட தலைவராக" இருக்கிறார். ராகுல் காந்தி அவர் விரும்பும் நேரத்தில் தனது முடிவை எடுக்க அனுமதிக்க வேண்டும்.

காங்கிரஸ் ஒரு "இடைக்கால செயல்முறையை" கடந்து வருவதாகவும், ஆனால் சோனியா காந்தி தலைமையில் இருப்பதால்  கட்சிக்கு எந்தவிதமான தலைமைத்துவ நெருக்கடியும் ஏற்படவில்லை.

நாங்கள் கடந்த காலங்களில் கட்சி தேர்தல்களை நடத்தி உள்ளோம் தேர்தல்கள் மிகச் சிறந்த விஷயம் அல்ல என்று தொண்டர்கள் சொல்வதையும் நாங்கள் கேட்டிருக்கிறோம். ஆகவே அதில் இரண்டு பார்வைகள் உள்ளன. இதுபோன்ற பிரச்சினைகளைப் பற்றி ஊடகங்களில் பேசுவது காங்கிரசுக்கு உதவாது.

நாங்கள் அனைவரும் காங்கிரஸை வழிநடத்த ராகுல் காந்தி மிகவும் பொருத்தமானவர் என  சொன்னோம். இது இப்போது கல்லில் எழுதப்பட்டுள்ளது, அது தெளிவாக உள்ளது. ஆனால் நாங்கள் அவரை எங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டால், முடிவெடுப்பதற்கான நேரத்தையும் அவருக்கு வழங்குவோம். நாங்கள் ஏன் எங்கள் கருத்துக்களை அவர் மீது திணிக்க விரும்புகிறோம் என கூறினார். 

Next Story