அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா இடம் பெற ஆதரவு : டிரம்ப் மீண்டும் உறுதி


அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா இடம் பெற ஆதரவு : டிரம்ப் மீண்டும் உறுதி
x
தினத்தந்தி 26 Feb 2020 6:46 AM GMT (Updated: 26 Feb 2020 6:46 AM GMT)

அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா இடம் பெற ஆதரவு அளிக்கப்படும் என்று டிரம்ப் மீண்டும் உறுதி செய்துள்ளார்.

வாஷிங்டன், 

48 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் (என்.எஸ்.ஜி.) உறுப்பினர் ஆவதற்கு கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த குழுவில் உள்ள பெரும்பான்மையான நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அண்டை நாடான சீனா, இந்தியாவை இந்த குழுவில் இணைப்பதற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு முட்டுக்கட்டுகளை போட்டு வருகிறது. 

அணு ஆயுத பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திடாத நாடுகளை உறுப்பினராக சேர்ப்பது என்றால் இந்தியாவுடன் பாகிஸ்தானையும் சேர்க்கவேண்டும் என்று பிடிவாதமாக உள்ளது.இந்தியாவோ, அணு ஆயுத பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திடாமலேயே உறுப்பினராக உள்ள பிரான்ஸ் நாட்டை மேற்கோள் காட்டி தன்னை உறுப்பினராக சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று கூறுகிறது. இதனால், இந்தியா அணு சக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா இணைவது தாமதம் ஆகிக் கொண்டே செல்கிறது. 

இந்த நிலையில், அணு சக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில்,  இந்தியா உடனடியாக இணைய ஆதரவு அளிக்கப்படும் என்று  அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்திய சுற்றுப்பயணத்திற்கு பிறகு இந்தியா  அமெரிக்கா இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டது. இந்தக் கூட்டறிக்கையில், ”அணுசக்தி விநியோகக் குழுவில் இந்தியா உடனடியாக இணைய ஆதரவு அளிக்கப்படும்  டிரம்ப் மீண்டும் உறுதி அளித்துள்ளார்” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :  ”அதிபர் டிரம்பும் பிரதமர் மோடியும் ஐக்கிய நாடுகள் அவை மற்றும் பிற சர்வதேச அமைப்புகளை சீர்திருத்தம் செய்வது மற்றும்  வலுப்படுத்துவது தொடர்பாக  ஒருங்கிணைந்து பணியாற்றுவது என தீர்மானித்துள்ளனர்.  அணு சக்தி விநியோக கூட்டமைப்பில் இந்தியா, உடனடியாக இணைய அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்பதை டிரம்ப் மீண்டும் உறுதி செய்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story