“எங்களுக்கு நீங்கள் ராஜதர்மத்தை கற்பிக்க வேண்டாம்” - சோனியா காந்தி மீது பாரதீய ஜனதா பாய்ச்சல்


“எங்களுக்கு நீங்கள் ராஜதர்மத்தை கற்பிக்க வேண்டாம்” - சோனியா காந்தி மீது பாரதீய ஜனதா பாய்ச்சல்
x
தினத்தந்தி 28 Feb 2020 11:00 PM GMT (Updated: 28 Feb 2020 9:37 PM GMT)

எங்களுக்கு நீங்கள் ராஜதர்மத்தை கற்பிக்க வேண்டாம் என்று சோனியா காந்திக்கு பாரதீய ஜனதா கட்சி கூறி உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட போராட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த மோதல்கள், வன்முறைகளில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் டெல்லி போலீஸ் வருவதால், கலவரத்தை அடக்க தவறிய மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.

இதையொட்டி சோனியா காந்தி தலைமையில், அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நேற்று முன்தினம் சந்தித்து மனு அளித்தனர். மேலும், நாட்டின் மக்களை பாதுகாக்க வேண்டிய ராஜதர்மம் மத்திய அரசுக்கு உண்டு என நினைவுபடுத்திய சோனியா காந்தி, அனைத்து மத மக்களையும் காக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

சோனியா காந்திக்கு பதில் அளிக்கிற விதத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டெல்லி கலவரத்தை பொறுத்தமட்டில் முதல் நாளில் இருந்தே, அதைத் தடுப்பதில் உள்துறை மந்திரி அமித் ஷா முனைப்பாக இருந்தார்.

கபில் மிஷ்ரா, பிரவேஷ் வர்மா ஆகியோரின் சர்ச்சைக்குரிய கருத்துகளை கட்சி ஒருபோதும் ஏற்றுக்கொண்டது கிடையாது.

சோனியா காந்தி அவர்களே, தயவு செய்து எங்களுக்கு நீங்கள் ராஜதர்மத்தை கற்பிக்க வேண்டாம். உங்கள் வரலாறு எத்தனையோ தடாலடி திருப்பங்களை கொண்டது.

காங்கிரஸ் எதைச்செய்தாலும் அது நாட்டுக்கு நல்லது, ஆனால் அதையே நாங்கள் செய்தால், அவர்கள் மக்களை தூண்டி விடுவார்கள். இது என்னவிதமான ராஜதர்மம்?

ஓட்டு வங்கி அரசியலுக்காக எந்த அளவுக்கும் செல்வதை காங்கிரஸ் கட்சி நிறுத்திக்கொள்ள வேண்டும். நாட்டில் அமைதியும், நல்லிணக்கமும் நிலவுவதற்கு காங்கிரஸ் கட்சி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

ரவிசங்கர் பிரசாத்துக்கு பதில் அளித்து காங்கிரஸ் கட்சி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளது. அதில், “சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்துக்கு முன்னுரிமை அளித்தது, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, மன்மோகன்சிங் ஆகியோரின் ராஜதர்மம் ஆகும். நீங்கள் (பாரதீய ஜனதா) என்ன செய்கிறீர்கள்? உங்களிடம் பாரபட்சம் இருக்கிறது. பிரிவினை மனநிலை உள்ளது” என கூறப்பட்டுள்ளது.

இதையொட்டி, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரு தவறான நடவடிக்கை என்று நாங்கள் நம்புகிற ஒன்றை எதிர்த்து அமைதியான முறையில் ஜனநாயக நாட்டில் பேசுகிறோம். எங்களை கைது செய்யுங்கள். தேசிய குடியுரிமை பதிவேடு தவறானது என்கிறோம். என்னை கைது செய்ய தயாரா?

இது தேசத்துரோகம் என்று நினைக்கிறீர்களா? இது தேசவிரோதம் என கருதுகிறீர்களா? இது ஆத்திரமூட்டும் செயலா? இது தூண்டிவிடுவதா? வன்முறையற்ற பேச்சு சுதந்திரம், வன்முறையற்ற போராட்டம் ஆகியவற்றை வன்முறையாக நீங்கள் கருதி நடத்தினால், அப்படிப்பட்ட ஒரு நாட்டில் வாழ்வதை வெட்கக்கேடு என்று கருதுகிறேன் என்று அவர் கூறினார்.


Next Story