மக்கள்தொகை கணக்கெடுப்பில் எந்த ஆவணமும் கேட்கப்படாது - அமித்ஷா விளக்கம்


மக்கள்தொகை கணக்கெடுப்பில் எந்த ஆவணமும் கேட்கப்படாது - அமித்ஷா விளக்கம்
x
தினத்தந்தி 13 March 2020 11:23 PM GMT (Updated: 2020-03-14T04:53:45+05:30)

“மக்கள்தொகை கணக்கெடுப்பு (என்.பி.ஆர்.) பணியின்போது எந்த ஆவணமும் கேட்கப்படாது” என்று மத்திய மந்திரி அமித்ஷா விளக்கம் அளித்தார்.

புதுடெல்லி,

மாநிலங்களவையில் டெல்லி கலவரம் குறித்த குறுகிய நேர விவாதத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:-

டெல்லி கலவரத்துக்கு காரணமானவர்கள் எந்த மதம், சாதி, கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் தப்ப முடியாது. அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்களை தண்டிப்பதில் அரசு ஒரு உதாரணமாக இருக்க விரும்புகிறது. 700-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு அரசு வக்கீல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்ட 1,922 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வன்முறைக்கு முன்னர் பணம் வினியோகித்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து இதற்காக பணம் வந்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றிய பின்னரே வெறுப்பு பேச்சுகள் தொடங்கியது. முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு சொல்கிறேன், குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தவறான பிரசாரம் பரப்பப்படுகிறது. இது குடியுரிமை வழங்குவதற்கு தானே தவிர, பறிப்பதற்காக அல்ல.

தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) புதுப்பித்தலில் யாரும் சந்தேகத்துக்கு உரியவர்களாக குறிக்கப்படமாட்டார்கள். எந்த ஆவணமும் கேட்கப்படாது. உங்களிடம் எந்த ஆவணமும் இல்லையென்றால், நீங்கள் சமர்ப்பிக்க தேவையில்லை.

இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Next Story