மும்பை அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து - 88 பயணிகள் பத்திரமாக மீட்பு


மும்பை அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து - 88 பயணிகள் பத்திரமாக மீட்பு
x
தினத்தந்தி 14 March 2020 8:30 PM GMT (Updated: 14 March 2020 8:30 PM GMT)

மும்பை அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. எனினும் படகில் இருந்த 88 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மும்பை,

மும்பை கேட்வே ஆப் இந்தியாவில் இருந்து நேற்று காலை 10.15 மணியளவில் ராய்காட் மாவட்டம் அலிபாக் பகுதியில் உள்ள மாந்த்வா கடற்கரைக்கு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சுற்றுலா படகு புறப்பட்டது. படகில் பெண்கள், குழந்தைகள் உள்பட 88 பயணிகள் இருந்தனர்.

மாந்த்வாவுக்கு சுமார் 1 கி.மீ. தொலைவில் சென்று கொண்டு இருந்த போது திடீரென படகிற்குள் தண்ணீர் புகுந் தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் உதவி கேட்டு அலறினர். அவர்கள் பதற்றத்தில் கூச்சல் போட்டனர்.

இந்தநிலையில் படகில் இருந்த உயிர்காக்கும் வீரர்களும், படகு ஓட்டியும் பயணிகளை சமாதானப்படுத்தினர். மேலும் நிலைமையை பயணிகளிடம் எடுத்து கூறி அவர்களை உயிர்காக்கும் கவசத்தை அணிய செய்தனர். மேலும் அவர்கள் சம்பவம் குறித்து ராய்காட் கடலோர காவல்படை ரோந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து கடலோர காவல் படை ரோந்து படகு விரைந்து சென்றது. வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தண்ணீர் புகுந்த படகு முழுமையாக கடலில் மூழ்குவதற்குள் அதில் இருந்தவர்களில் 80 பயணிகளை மீட்டு, ரோந்து படகில் ஏற்றினர். மேலும் தனியார் படகு ஒன்றில் 8 பயணிகள் மீட்கப்பட்டனர். அதன் பிறகே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பின்னர் அவர்கள் பத்திரமாக மாந்த்வா படகு துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்தநிலையில் பயணிகள் மீட்கப்பட்ட சில நிமிடங்களில் அந்த படகு கடல் நீரில் மூழ்கியது. அந்த படகை மீட்கும் முயற்சி தொடங்கியது. பாறையில் மோதியதால் படகில் ஓட்டை விழுந்து கடல்நீர் உள்ளே புகுந்து விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நடுக்கடலில் பயணிகள் படகு கவிழ்ந்த சம்பவத்தால் நேற்று அலிபாக் மற்றும் கேட்வே ஆப் இந்தியா பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story