தமிழர் உள்பட 10 பேர் பலி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 600-ஐ தாண்டியது


தமிழர் உள்பட 10 பேர் பலி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 600-ஐ தாண்டியது
x
தினத்தந்தி 25 March 2020 10:45 PM GMT (Updated: 25 March 2020 10:32 PM GMT)

இந்தியாவில் கொரோனாவால் பலியானவர் எண்ணிக்கை 10 ஆகியிருக்கும் நிலையில், தொற்று பாதித்தவர் எண்ணிக்கையும் 600-ஐ தாண்டி உள்ளது.

புதுடெல்லி, 

உலகம் முழுவதிலும் பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு எதிராக மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்தபோதும், வைரசின் அச்சுறுத்தல் தொடர்ந்து வருகிறது.

அந்தவகையில் மராட்டியத்தில் இருவர், தமிழகம், டெல்லி, பீகார், கர்நாடகம், குஜராத், பஞ்சாப், மேற்கு வங்காளம் மற்றும் இமாசல பிரதேசத்தில் தலா ஒருவர் என 10 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். டெல்லியில் மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலியானதாக கூறப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

இது ஒருபுறம் இருக்க இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களிலும் வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி நாடு முழுவதும் 606 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக சுகாதார அமைச்சகம் அறிவித்து உள்ளது.

இதில் மராட்டியம், கேரளா ஆகிய மாநிலங்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100-ஐ கடந்து விட்டது. தமிழகத்தில் நேற்று மேலும் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம் மொத்த எண்ணிக்கை 26 ஆக அதிகரித்தது.

உத்தரபிரதேசத்தில் இந்த எண்ணிக்கை 38 ஆக உயர்ந்திருக்கும் நிலையில், பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசி மக்களுடன் நேற்று கலந்துரையாடினார். காணொலி காட்சி மூலம் நடந்த இந்த நிகழ்ச்சியில் கொரோனா குறித்த பல்வேறு கேள்விகளுக்கு அவர் விடையளித்தார்.

மேற்கு வங்காளத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் மாநிலம் முழுவதும் மசூதிகளில் 4 அல்லது 5 பேருடன் மட்டுமே தொழுகை மற்றும் வழிபாடுகளை நடத்த வேண்டும் என மாநில இமாம் சங்க தலைவர் முகமது யாகியா தெரிவித்து உள்ளார். மீதமுள்ளவர்கள் தங்கள் வீட்டிலேயே தொழுகையை நடத்திக்கொள்ளலாம் எனவும் அவர் கூறினார்.

கொரோனாவை கட்டுப்படுத்த பஞ்சாபில் கடுமையான ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக நேற்று காலை 8 மணி முதல் 11 மணி வரை இந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டது. எனினும் சில பகுதிகளில் மக்களின் வீடுகளுக்கே இந்த பொருட்களை கொண்டு சென்று விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்திருந்தது.

மாநிலத்தில் ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்கள் மீது 232 வழக்குகள் மற்றும் 111 பேர் கைது போன்ற நடவடிக்கைகள் நேற்று முன்தினம் எடுக்கப்பட்டன. எனினும் தற்போது நிலைமையை புரிந்துகொண்டு மக்கள் வீடுகளிலேயே இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே மராட்டியத்தில் முதன் முதலாக கொரோனாவுக்கு சிக்கிய கணவன்-மனைவி இருவர் முழுமையாக குணமடைந்து விட்டனர். அவர்கள் விரைவில் வீட்டுக்கு செல்வார்கள் என புனே ஆஸ்பத்திரி அறிவித்து உள்ளது.

வைரஸ் தொற்றை தடுக்க சமூக விலகலே முக்கியமானது எனக்கூறியுள்ள ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், இந்த நடவடிக்கைகளில் முன்மாதிரியாக திகழுமாறு ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை கேட்டுக்கொண்டு உள்ளார். நாட்டில் அறிவிக்கப்பட்டு உள்ள 21 நாள் ஊரடங்குக்குப்பின் இயக்கப்பணிகள் தொடங்கும் எனவும் அவர் அறிவித்து உள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 606 ஆக அதிகரித்து இருக்கும் நிலையில், மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷர்வதன் நேற்று டெல்லியில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். இதைப்போல தேசிய அளவிலான ஊரடங்கை மத்திய உள்துறை அமைச்சகம் கண்காணித்து வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

கொரோனா தொற்றுக்கு எதிராக போராடி வரும் மருத்துவ பணியாளர்கள், தூய்மை தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கான முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் போதுமான அளவு கிடைப்பதை அரசு உறுதி செய்யும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதைப்போல கொரோனா தொற்றை பரிசோதிக்க 29 தனியார் பரிசோதனை மையங்கள், 16 ஆயிரம் மாதிரி சேகரிப்பு மையங்களும் இதுவரை பதிவு செய்யப்பட்டு உள்ளன.

Next Story