கர்நாடக எல்லைக்குள் ஆம்புலன்சை அனுமதிக்காததால் பெண் சாவு; கேரள முதல்-மந்திரி, பிரதமருக்கு கடிதம்


கர்நாடக எல்லைக்குள் ஆம்புலன்சை அனுமதிக்காததால் பெண் சாவு; கேரள முதல்-மந்திரி, பிரதமருக்கு கடிதம்
x
தினத்தந்தி 29 March 2020 10:00 PM GMT (Updated: 29 March 2020 9:56 PM GMT)

கேரளாவில் இருந்து சென்ற ஆம்புலன்சை கர்நாடக எல்லைக்குள் அனுமதிக்காததால் 70 வயது பெண் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

காசர்கோடு, 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநில எல்லைகள் அடைக்கப்பட்டுள்ளன.

பிற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இது ஒரு பெண்ணின் உயிரை பறித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 70 வயதுடைய ஒரு பெண் கடந்த 14-ந் தேதி கேரள மாநிலம் காசர்கோடில் உள்ள தனது மகன் வீட்டுக்கு வந்து தங்கியிருந்தார். அங்கு அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதனால் சனிக்கிழமை காசர்கோடில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் மங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அந்த பெண்ணை கொண்டு செல்ல முயன்றனர்.

ஆனால் கர்நாடக எல்லையான தாலபாடியில் உள்ள போலீசார் கேரள மாநில ஆம்புலன்சை தங்கள் மாநில எல்லைக்குள் அனுமதிக்க முடியாது என்று கூறி மறுத்துவிட்டனர். அந்த பெண்ணின் குடும்பத்தினரும், ஆம்புலன்ஸ் டிரைவரும் பலமுறை போலீசாரிடம் நிலைமையை எடுத்துக்கூறியும் அவர்கள் அனுமதிக்கவில்லை.

ஆம்புலன்சை திரும்பிப்போகும்படி போலீசார் கூறிவிட்டனர். இதனால் அந்த பெண்ணுக்கு வழியில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு, வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் நேற்று காலை அந்த பெண் பரிதாபமாக இறந்துபோனார். இந்த தகவல்களை அந்த பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

3 நாட்கள் முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்ட ஒரு முதியவரும் மங்களூரு ஆஸ்பத்திரிக்கு செல்ல முயன்றபோது எல்லையில் அனுமதி மறுக்கப்பட்டதால் இறந்துபோனார்.

பீகாரை சேர்ந்த ஒரு பெண் பிரசவ வலியுடன் ஆம்புலன்சில் பக்கத்து மாநிலத்தில் உள்ள அவரது டாக்டரை பார்க்க சென்றபோது அனுமதி மறுக்கப்பட்டார். இதனால் அந்த பெண்ணுக்கு ஆம்புலன்சிலேயே குழந்தை பிறந்தது.

கர்நாடகா எல்லை அருகே உள்ள கேரளாவின் கிராமத்து மக்கள் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு மங்களூருவையே நம்பி உள்ளனர். கர்நாடகம் அவர்களை அனுமதிக்க மறுப்பதால் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.

காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச்சென்ற பல லாரிகள் மாகூடம் மற்றும் சில இடங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “எல்லையோர கிராமத்து மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு அண்டை மாநிலத்தையே நம்பி உள்ளனர். கர்நாடகம் தனது எல்லைகளை சாலையில் மண்ணை குவித்து மூடியுள்ளது. இது மத்திய அரசின் நோக்கத்துக்கு எதிரானது. இந்த பிரச்சினையில் பிரதமர் தலையிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Next Story