டெல்லியில் நடந்த மத மாநாட்டில் பங்கேற்று, 5 ரெயில்களில் ஊர் திரும்பியவர்களை கண்டறியும் பணி தீவிரம்
டெல்லியில் நடந்த மத மாநாட்டில் பங்கேற்று, 5 ரெயில்களில் ஊர் திரும்பியவர்களை கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாட்டில் வெளிநாட்டினர் உள்பட 1,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதும், அவர்களில் சிலர் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவி இருப்பதும் தெரியவந்து உள்ளது.
டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 24 பேர், இந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் என கண்டறியப்பட்டு இருக்கிறது.
இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் 5 ரெயில்கள் மூலம் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் சென்றனர்.
அந்த வகையில் மார்ச் 13-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை டெல்லியில் இருந்த சென்னை வந்த கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களில் கணிசமான பேர் தமிழகத்துக்கு வந்து இருக்கிறார்கள்.
இதேபோல் துரந்தோ எக்ஸ்பிரஸ் மூலம் ஆந்திர மாநிலம் குண்டூருக்கும், சம்பர்க் கிரந்தி எக்ஸ்பிரஸ் மூலம் அதே ஆந்திராவுக்கும், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் மூலம் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கும் சென்று இருக்கிறார்கள். ஆனால், மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் எத்தனை பேர் சென்றார்கள் என்ற தகவல் இல்லை. ஒவ்வொரு ரெயிலிலும் 1,000 முதல் 1,200 பேர் வரை பயணம் செய்யலாம் என்பதால், மாநாட்டில் பங்கேற்ற கணிசமான பேர் அந்த ரெயில்களில் பயணம் செய்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அந்த ரெயில்களில் பயணம் செய்தவர்களின் பெயர் பட்டியலை ரெயில்வே நிர்வாகம் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் வழங்கி இருக்கிறது. அந்த பட்டியலை வைத்து, டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு வந்தவர்கள் யார்-யார்? என்பது பற்றி அந்தந்த மாநில அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவர்களில் கணிசமான பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா? என்று பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் டெல்லியில் இருந்த வந்தபிறகு அவர்கள் எங்கெங்கு சென்றார்கள்? யார்-யாருடன் தொடர்பில் இருந்தார்கள் என்பதை கண்டறியும் பணியிலும் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
சம்பர்க் கிரந்தி எக்ஸ்பிரஸ் மூலம் ஆந்திர மாநிலம் கரீம் நகர் வந்தவர்களில் 10 பேர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
மார்ச் 16-ந்தேதி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி சென்ற ராஜ்தானி எக்ஸ்பிரசின் பி-1 பெட்டியில் 60 பேர் பயணம் செய்து உள்ளனர். அந்த பெட்டியில் பயணம் செய்த மலேசியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது பரிசோதனையில் உறுதியாகி இருக்கிறது. இந்தநிலையில் அந்த ரெயிலில் பயணம் செய்த மேலும் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
சென்னை வந்த கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரெயிலின் எஸ்-2 பெட்டியில் இரு குழந்தைகளுடன் வந்த இருவருக்கும் மற்றும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது என்று டெல்லியில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்லியில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கும் சென்றவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது சிரமமான காரியம் என்றும் அவர்கள் கூறினார்கள்.
டெல்லியில் உள்ள ஹசரத் நிஜாமுதீன் ரெயில் நிலையமும், புதுடெல்லி ரெயில் நிலையமும் மிகவும் பரபரப்பான ரெயில் நிலையங்கள் ஆகும். இந்த ரெயில் நிலையங்களில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கும் தினந்தோறும் ஏராளமான ரெயில்கள் புறப்பட்டு செல்கின்றன. இதேபோல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான ரெயில்கள் வருகின்றன.
அந்த வகையில் ஹசரத் நிஜாமுதீன் ரெயில் நிலையத்துக்கு ஒரு நாளைக்கு சுமார் 2 லட்சம் பயணிகளும், புதுடெல்லி ரெயில் நிலையத்துக்கு சுமார் 5 லட்சம் பயணிகளும் வந்து செல்கிறார்கள்.
இதனால் அந்த மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியவர்கள் எந்த ரெயில் நிலையத்தில் இருந்து சென்றார்கள்? அவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று இருந்தது? அவர்களால் ரெயில் நிலையங்களிலும், ரெயில்களிலும் எத்தனை பேருக்கு தொற்று பரவி இருக்கும்? அல்லது அவர்களில் எத்தனை பேர் மற்றவர்களால் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருப்பார்கள்? என்பதை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமான காரியம் என்று அதிகாரிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story