ஒரே நாளில் 1,076 பேருக்கு நோய் தொற்று; இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13,835 ஆக உயர்வு


ஒரே நாளில் 1,076 பேருக்கு நோய் தொற்று; இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13,835 ஆக உயர்வு
x
தினத்தந்தி 17 April 2020 11:47 PM GMT (Updated: 2020-04-18T05:17:09+05:30)

இந்தியாவில் ஒரே நாளில் 1,076 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13,835 ஆக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று மாலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில், இந்த வைரஸ் தொற்றால் இந்தியாவில் 13,835 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கையும் 452 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசால் நேற்று முன்தினம் வரை 12,759 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று இந்த எண்ணிக்கை 13,835 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் 1,076 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே 5 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு 1000-ஐ தாண்டிய நிலையில், இந்த பட்டியலில் புதிதாக நேற்று 6-வது மாநிலமாக குஜராத் இணைந்தது.

கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலமான மராட்டியத்தில் வைரஸ் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 3,200-ஐ தாண்டியது. கொடூர கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி அங்கு மட்டும் 190-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் புதிதாக 56 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,323 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 ஆக உள்ளது. இந்த வைரசால் அங்கு ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், 2 பேர் குணமடைந்துள்ளனர்.

அண்டை மாநிலங்களான ஆந்திராவில் 570-க்கும் அதிகமானோரும், கர்நாடகாவில் 350-க்கும் மேற்பட்டோரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் இந்த எண்ணிக்கை 400-ஐ நெருங்கி உள்ள நிலையில், 255 பேர் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

Next Story