10 மற்றும் 12-ம் வகுப்பு மீதம் உள்ள பாடங்களுக்கு தேர்வு நடைபெறும் - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு


10 மற்றும் 12-ம் வகுப்பு மீதம் உள்ள பாடங்களுக்கு தேர்வு நடைபெறும் - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு
x
தினத்தந்தி 29 April 2020 11:00 PM GMT (Updated: 29 April 2020 10:47 PM GMT)

10 மற்றும் 12 வகுப்புகளுக்கு மீதம் உள்ள பாடங்களுக்கான பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டபடி நடைபெறும் என்று சி.பி.எஸ்.இ. கூறி உள்ளது.

புதுடெல்லி, 

சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலை கல்வி வாரியம்) 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடந்து கொண்டிருந்தபோது, கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த மாதம் 24-ந் தேதி முதல் நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் 10 மற்றும் 12-ம் வகுப்புக்கு சில பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறவில்லை. வட கிழக்கு மாநிலங்களில் 10-ம் வகுப்புக்கு சில பாடங்களுக்கான தேர்வுகள் மட்டும் நடைபெறவில்லை.

இதனால் மேற்கண்ட இரண்டு வகுப்புகளுக்கும் இன்னும் பாக்கி இருக்கும் 29 பாடங்களுக்கான தேர்வை நடத்துவது குறித்து சி.பி.எஸ்.இ. கடந்த 1-ந் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

இந்தநிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் நேற்று முன்தினம் மாநில கல்வி மந்திரிகளுடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தினார். அதில் கலந்து கொண்டு பேசிய டெல்லி துணை முதல்-மந்திரியும் கல்வி மந்திரியுமான மணிஷ் சிசோடியா, சி.பி.எஸ்.இ. வகுப்புகளுக்கு மீதம் உள்ள பாடங்களுக்கான தேர்வுகளை நடத்துவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும், எனவே மாணவர்களின் நலன் கருதி அந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார்.

இதனால் மீதம் உள்ள தேர்வுகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாயின.

இதைத்தொடர்ந்து, இதுபற்றி சி.பி.எஸ்.இ. விளக்கம் அளித்து உள்ளது.

“10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பாக்கி இருக்கும் 29 பாடங்களுக்கு பாடங்களுக்கான தேர்வுகள் குறித்து ஊகங்களின் அடிப்படையில் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த பாடங்களுக்கு தேர்வுகள் நடத்துவது பற்றி சி.பி.எஸ்.இ. முடிவு எடுத்து அதுகுறித்து ஏற்கனவே 1-4-2020 அன்று சுற்றறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. அதில் கூறப்பட்டுள்ளபடி தேர்வு நடைபெறும்” என்று சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டு உள்ளது.

தேர்வுகளை நடத்தும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றும், தேர்வுகள் நடைபெறும் சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் தெரிவித்து இருக்கிறார்.

தேர்வுகள் தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு முன்னர் அதுபற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று மனித வள மேம்பாட்டு துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு விடைத்தாள்களை திருத்தி முடிக்க 1½ மாதம் வரை ஆகும் என்றும், இதுவரை 30 சதவீத விடைத்தாள்கள் மட்டுமே திருத்தி முடிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Next Story