வீடு, வாகன கடன் தவணை தொகை செலுத்த மேலும் 3 மாதம் அவகாசம் - ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு


வீடு, வாகன கடன் தவணை தொகை செலுத்த மேலும் 3 மாதம் அவகாசம் - ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு
x
தினத்தந்தி 23 May 2020 5:45 AM IST (Updated: 23 May 2020 1:18 AM IST)
t-max-icont-min-icon

வீடு, வாகன கடன் தவணை தொகை செலுத்த மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கப்படுவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவித்து உள்ளார். மேலும் வீட்டுக்கடனுக்கான வட்டியும் குறைகிறது.

மும்பை,

கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த 2 மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதனால் நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு இருப்பதால் உற்பத்தி முடங்கி இருக்கிறது. ஏராளமான பேர் வேலை இழந்து தவிக்கிறார்கள். இதன் காரணமாக நாட்டில் பணப்புழக்கமும் குறைந்து உள்ளது.

இதைத்தொடர்ந்து, நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரித்து, பொருளாதாரத்தை மீட்கும் வகையில் ரிசர்வ் வங்கி கடந்த மார்ச் மாதம் சில அறிவிப்புகளை வெளியிட்டது. பிரதமர் மோடி அறிவித்த ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்தின் கீழ் தொழில்துறை, வேளாண்மை, கட்டுமான தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மேம்பாட்டுக்காக ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சமீபத்தில் அறிவித்தார்.

இந்தநிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நேற்று மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் சில சலுகை அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. உலக பொருளாதாரத்தின் அளவு 13 சதவீதம் முதல் 32 சதவீதம் வரை சுருங்கக்கூடும். இந்தியாவிலும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையை ரிசர்வ் வங்கி கவனித்து வருகிறது.

பணப்புழக்கத்தை அதிகரித்து பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 0.4 சதவீதம் குறைக்கப்படுகிறது. அதாவது ரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதனால் வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன், வாகன கடன் போன்ற கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும்.

இதேபோல், ரிசர்வ் வங்கியில் வங்கிகள் வைத்துள்ள வைப்புத்தொகைக்கான ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.75 சதவீதத்தில் இருந்து 3.35 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. வீடு, வாகனம் போன்றவை வாங்குவதற்காக வங்கிகளில் பெற்றுள்ள கடனுக்கான தவணை தொகையை திருப்பி செலுத்த ஏற்கனவே வருகிற 31-ந் தேதி வரை 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.

கொரோனாவின் காரணமாக ஊரடங்கு நீடிப்பதால், கடன் தவணையை செலுத்துவதற்கான அவகாசம் ஜூன் 1-ந் தேதியில் இருந்து ஆகஸ்டு 31-ந் தேதி வரை மேலும் 3 மாதம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடன் வாங்கியவர்களின் வங்கி கணக்கில் இருந்து மாத தவணை தொகை பிடித்தம் செய்யப்படமாட்டாது. செலுத்தப்படாத தவணை தொகை வட்டியையும் சேர்த்து கடன் தொகையுடன் சேர்க்கப்படும்.

சந்தை பொருளாதாரத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கி மேலும் பல நடவடிக்கைகளை எடுக்கும். இதேபோல் ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், மாநிலங்களின் நிதி பிரச்சினையை சரி செய்யவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சலுகை வசதியில் கடன் வழங்கப்படும்

சிறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. தொழில்துறை உற்பத்தி மார்ச் மாதத்தில் 17 சதவீதம் குறைந்து இருக்கிறது. கொரோனா பாதிப்புக்கு முன்பே இந்திய பொருளாதாரம் மந்தநிலையில் இருந்தது. 2019-2020-ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 4.9 சதவீதமாக குறைக்கப்பட்டது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத மந்தநிலை ஆகும். உள்நாட்டு உற்பத்தி இந்த ஆண்டிலும் வீழ்ச்சியை சந்திக்கும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறிதளவு கூட வளர்ச்சி ஏற்படுவதற்கான சூழ்நிலை இல்லை. பொருளாதார, நிதி நடவடிக்கைகள் முடங்கி இருப்பதால் மக்களின் வாழ்வாதாரமும், சுகாதாரமும் பாதிக்கப்பட்டு உள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த இறக்குமதி வரி விகிதத்தை மறு ஆய்வு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது.

வேளாண் துறை வளர்ச்சி நம்பிக்கை அளிக்கும் விதமாக இருக்கிறது. நாட்டில் மானாவாரி சாகுபடி பரப்பு 44 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. ஏப்ரல் மாதம் உணவுப் பொருட்களின் பணவீக்கம் அதிகரித்து உள்ளது. அதாவது உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து இருக்கிறது. அடுத்த சில மாதங்களில் பருப்பு வகைகளின் விலை அதிகரிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story