லடாக் பகுதியில் இந்திய வீரர்களை சீன ராணுவம் சிறை பிடித்ததா?


லடாக் பகுதியில் இந்திய வீரர்களை சீன ராணுவம் சிறை பிடித்ததா?
x
தினத்தந்தி 26 May 2020 4:45 AM IST (Updated: 25 May 2020 4:05 AM IST)
t-max-icont-min-icon

லடாக் பகுதியில் நமது வீரர்களை சீன ராணுவம் சிறை பிடித்ததாக வெளியான தகவலை இந்திய ராணுவம் மறுத்து உள்ளது.

புதுடெல்லி,
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே சில இடங்களில் எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. அருணாசலபிரதேசத்தையும் சொந்தம் கொண்டாடுவதை சீனா வழக்கமாக கொண்டு உள்ளது. ஆனால் அருணாசலபிரதேச மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், அதை சீனா சொந்தம் கொண்டாடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் இந்தியா திட்டவட்டமாக பலமுறை தெரிவித்து விட்டது.

இதனால் எல்லை பிரச்சினை தொடர்பாக இந்தியாவுக்கு சீனா அவ்வப்போது தொல்லை கொடுத்து வருகிறது. குறிப்பாக லடாக் எல்லைப்பகுதியில் அத்துமீறலில் ஈடுபட முயற்சிக்கிறது.

லடாக் எல்லையையொட்டி அமைந்துள்ள பங்கோங் டிசோ, கல்வான் பள்ளத்தாக்கில் தங்கள் பகுதிகளில் சீனா கூடுதல் வீரர்களை குவித்து உள்ளது. அங்குள்ள சர்ச்சைக்குரிய ஏரியில் சீன ராணுவ வீரர்கள் படகு மூலம் ரோந்து சென்று கண்காணிக்கிறார்கள். ஆனால் அங்கு இந்திய பகுதியில் சாலை அமைத்தற்கு சீனா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே, கடந்த 5-ந் தேதி லடாக் எல்லை பகுதியில் இந்திய-சீன வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும், இது 6-ந் தேதி காலை வரை நீடித்ததாகவும் தகவல் வெளியானது.

இதைத்தொடர்ந்து இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவானே அங்குள்ள லே பகுதிக்கு சென்று லடாக் எல்லை நிலவரம் குறித்து நேரில் ஆய்வு செய்துவிட்டு திரும்பினார். மேலும் லடாக் எல்லை பகுதியில் உள்ள நிலவரம் குறித்து உயர் ராணுவ அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், இரு தரப்புக்கும் இடையே 5-ந் தேதி ஏற்பட்ட கைகலப்பின் போது ஆயுதங்களுடன் இந்திய வீரர்களை சீன ராணுவம் சிறிது நேரம் சிறைபிடித்து வைத்து இருந்ததாகவும், பின்னர் அவர்களை ஆயுதங்களுடன் விட்டுவிட்டதாகவும் சில ஊடகங்களில் தகவல் வெளியானது.

ஆனால் இதை இந்திய ராணுவம் மறுத்து உள் ளது. இதுபற்றி ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “எல்லை பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டதாக வெளியான தகவலை ராணுவம் திட்டவட்டமாக மறுக்கிறது. நமது வீரர்கள் யாரும் சிறைபிடிக்கப்படவில்லை. ஊடகங்கள் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிடும் போது தேசத்தின் நலன்தான் பாதிக்கப்படும்” என்றார்.

Next Story