லடாக் எல்லையில் பதற்றத்தை தணிக்க முயற்சி: இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை


லடாக் எல்லையில் பதற்றத்தை தணிக்க முயற்சி: இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 10 Jun 2020 11:30 PM GMT (Updated: 10 Jun 2020 9:54 PM GMT)

லடாக் எல்லையில் பதற்றத்தை தணிப்பது தொடர்பாக இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் நேற்று மீண்டும் சந்தித்து பேசினார்கள்.

புதுடெல்லி, 

கிழக்கு லடாக் பிராந்தியத்தில் பங்கோங் சோ அருகே கடந்த மாதம் 5-ந் தேதி இந்தியா-சீனா படையினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதனால் அங்கு பதற்றம் நிலவி வந்தது.

இதற்கிடையே, கடந்த 6-ந் தேதி இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், உகான் மாநாட்டில் இருநாட்டு தலைவர்களும் எடுத்த முடிவுகளை பின்பற்றுவது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.

அதன்படி, லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள 14 மற்றும் 15-வது ரோந்து பகுதிகள், ஹாட் ஸ்பிரிங் ஆகிய இடங்களில் இருந்து இருநாட்டு ராணுவமும் அவரவர் ஏற்கனவே இருந்த இடத்துக்கு பின்வாங்கிச் சென்றன.

இந்த நிலையில், இந்த தகவல் குறித்து நேற்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் குவா சுன்யிங்கிடம் நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு குவா சுன்யிங் கூறியதாவது:-

எல்லை நிலவரம் தொடர்பாக சமீபத்தில் இந்தியா-சீனா இடையே ராஜ்யரீதியாகவும், ராணுவரீதியாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் ஆக்கப்பூர்வ கருத்தொற்றுமை உருவானது. எல்லையில் பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கையாக, இந்த கருத்தொற்றுமையை இரு நாட்டு படைகளும் அமல்படுத்தி வருகின்றன என்று அவர் கூறினார்.

இந்த நிலையில் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

லடாக் எல்லையில் பங்கோங் சோ, தவுலத் பெக் ஓல்டி, டெம்சோக் ஆகிய 3 பகுதிகளில் இருந்து இந்திய-சீன படைகள் இன்னும் வாபஸ் ஆகவில்லை. இதனால் அங்கு நிலவும் பதற்ற நிலைக்கு தீர்வு காண்பது தொடர்பாக இரு தரப்பு மேஜர் ஜெனரல்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.

4½ மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது, இந்த 3 பகுதிகளிலும் முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும், கணிசமான துருப்புகளை சீனா வாபஸ் பெற வேண்டும் என்றும் இந்திய தரப்பில் வற்புறுத்தப்பட்டது.

இரு தரப்பிலும் பதற்றத்தை மேலும் தணிக்கும் வகையில் இந்த பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக அமைந்து இருந்ததாக டெல்லியில் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story