அனாமிகா சுக்லா வழக்கு; போலி ஆவணங்களை பயன்படுத்திய மற்றொரு ஆசிரியை கைது


அனாமிகா சுக்லா வழக்கு; போலி ஆவணங்களை பயன்படுத்திய மற்றொரு ஆசிரியை கைது
x
தினத்தந்தி 14 Jun 2020 5:19 AM GMT (Updated: 14 Jun 2020 5:19 AM GMT)

அனாமிகா சுக்லா வழக்கில் போலி ஆவணங்களை பயன்படுத்திய மற்றொரு ஆசிரியை இன்று கைது செய்யப்பட்டு உள்ளார்.

லக்னோ,

உத்தரப்பிரதேசத்தில் மெயின்புரியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை அனாமிகா சுக்லா என்பவருக்கு ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணியாற்றியதாக கணக்கு காட்டப்பட்டு, அவருக்கு மாதம் ரூ.1 கோடி ஊதியமாக வழங்கப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.  அதாவது மாநிலத்தில் அம்பேத்கார் நகர், அலிகார், பிரயாக்ராஜ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கும் கஸ்தூர்பா காந்தி பலிகா வித்யாலயா பள்ளியில் பணியாற்றியதாக அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

இது தொடரபான விசாரணைக்கு  உத்தரப்பிரதேச மாநில தொடக்க கல்வி துறையின் கூடுதல் இயக்குநர் உத்தரவிட்டு இருந்தார்.  இந்த வழக்கில், அனமிகா சுக்லா என்ற பெயரிலான சான்றிதழ்களை கொண்டு பணியாற்றி வந்த பிரியா சிங் என்பவரை கஸ்கஞ்ச் போலீசார் கடந்த 6ந்தேதி கைது செய்தனர்.

ஐந்து மாவட்டங்களில் அனாமிகா சுக்லா பெயரில்  ஏற்கனவே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன.  இவை தவிர்த்து வாரணாசி மற்றும் அமேதியிலும் அவர் வேலை செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது.  அனாமிகா அறிவியல் ஆசிரியை ஆவார்.

நேர்மையின்மை, ஆள்மாறாட்டம் மூலம் மோசடி செய்தல், போலி ஆவணங்களை பயன்படுத்துதல் என அனாமிகாவுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.  இந்நிலையில், கடந்த 10ந்தேதி, உண்மையான அனாமிகா சுக்லா கல்வி அதிகாரி முன் ஆஜராகி, தனது கல்வி சான்றிதழ்கள் தவறாக பயன்படுத்தப்பட்டு உள்ளன என புகார் கூறினார்.  இந்த மோசடிக்கும், அனாமிகாவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

அவரது பெயரில் பணிபுரிபவர்கள் போலியானவர்கள்.  அனாமிகாவின் சான்றிதழ்களை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்கள் என கல்வி அதிகாரி பிரஜாபதி கூறியுள்ளார்.

இந்த வழக்கில் மெயின்புரி நகரை சேர்ந்த அனிதா தேவி என்ற மற்றொரு பெண்ணை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.  அவர் ஆசிரியை பணியில் சேர, போலி ஆவணங்களை பயன்படுத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.  தேவி கடந்த ஒரு வருடம் ஆக பள்ளியொன்றில் ஆசிரியையாக இருந்துள்ளார்.  அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Next Story