தேசிய செய்திகள்

கொரோனா பரிசோதனைக்கு நாடு முழுவதும் ஒரே கட்டணம்; மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு + "||" + COVID-19 Treatment Cost Should be The Same in Every State, Says Supreme Court

கொரோனா பரிசோதனைக்கு நாடு முழுவதும் ஒரே கட்டணம்; மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கொரோனா பரிசோதனைக்கு நாடு முழுவதும் ஒரே கட்டணம்; மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
கொரோனா பரிசோதனைக்கு நாடு முழுவதும் ஒரே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும், ஆஸ்பத்திரிகளுக்கு சென்று ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்தும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை கையாளும் விதம் குறித்தும் செய்தித்தாள்கள் மற்றும் காட்சி ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு, “கொரோனா நோயாளிகளுக்கான முறையான சிகிச்சை மற்றும் கொரோனாவால் இறந்தோரின் உடல்களை ஆஸ்பத்திரிகள் கவுரவத்துடன் கையாளுதல்“ என்ற தலைப்பில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து உள்ளது,

இதுபற்றி விசாரணை நடத்த நீதிபதி அசோக் பூஷண் தலைமையில் அமர்வு ஒன்றை அமைத்து தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே உத்தரவிட்டார். கடந்த 12-ந் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, கொரோனா நோயாளிகளுக்கு ஆஸ்பத்திரிகளில் அளிக்கப்படும் சிகிச்சை உள்ளிட்டவை தொடர்பான நிலைத்தகவல் அறிக்கையை மத்திய அரசும், மராட்டியம், தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களும் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

அதன்படி மத்திய அரசும், மராட்டியம், தமிழ்நாடு டெல்லி மாநில அரசுகளும், கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும், கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை மருத்துவ பணியாளர்கள் கையாளும் விதம் குறித்தும் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்து உள்ளன.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.கே.கவுல், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் காணொலி காட்சி மூலம் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்கள் மற்றும் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

அந்த உத்தரவில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* டெல்லியில் உள்ள மத்திய அரசு ஆஸ்பத்திரிகள், டெல்லி மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஆஸ்பத்திரிகள், எய்ம்ஸ் ஆஸ்பத்திரி ஆகியவற்றின் மூத்த டாக்டர்கள், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ஆகியோரை கொண்ட நிபுணர் குழு ஒன்றை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அமைக்க வேண்டும். இதேபோல் அனைத்து மாநிலங்களும் நிபுணர்கள் அடங்கிய குழுக்களை அமைக்க வேண்டும்.

* இந்த நிபுணர் குழுக்கள் 7 நாட்களுக்குள் அமைக்கப்பட வேண்டும்.

* இந்த நிபுணர் குழு, கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரிகளுக்கு குறைந்தது வாரம் ஒருமுறை சென்று அங்கு அந்த நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதுபற்றி மாநில அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

* டெல்லியில் அமைக்கப்படும் நிபுணர் குழு டெல்லி மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

கண்காணிப்பு கேமராக்கள்

* டெல்லியிலும் மற்ற மாநிலங்களிலும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

* கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை நிபுணர் குழுவின் ஆய்வுக்கு வழங்க வேண்டும்.

* இதுவரை கண்காணிப்பு கேமரா பொருத்தப்படாத அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் உடனடியாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

நோயாளிக்கு உதவியாக ஒருவர்

*கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் ஒவ்வொருவருக்கும் உதவிக்கு ஒரு நபரை அனுமதிக்கலாம். அந்த நபர் ஆஸ்பத்திரி ஒதுக்கும் குறிப்பிட்ட பகுதியில் இருக்க அனுமதிக்க வேண்டும்.

*கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் அனைத்து ஆஸ்பத்திரிகளும் நேரடியாகவும் தொலைபேசி வழியாகவும் ஆலோசனை வழங்கும் உதவி மையங்களை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம், அங்கு அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் நிலை குறித்து அவருடைய உறவினர்கள் அறிந்து கொள்ளும் வகையில் தகவல்கள் அளிக்க வேண்டும்.

நாடு முழுவதும் ஒரே கட்டணம்

* குணம் அடைந்த நோயாளிகளை ஆஸ்பத்திரிகளில் இருந்து அனுப்புவதற்கு நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியான வழிகாட்டு முறைகளை மத்திய அரசு வெளியிட வேண்டும்.

* கொரோனா பரிசோதனைக்காக நாடு முழுவதும் ஒரே மாதிரியான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். ஏதாவது மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் இந்த கட்டணத்தில் வேறுபாடு இருந்தால் மத்திய அரசு உடனடியாக கவனித்து உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

* நோயாளியின் பரிசோதனை அறிக்கையை அவருடைய உறவினர்களுக்கும், சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிக்கும் மாநில அரசுகள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு அடுத்த மாதம் 3-வது வாரம் மீண்டும் விசாரணைக்கு வரும் என்று நீதிபதிகள் அறிவித்து உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய ரிட் மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
2. "கடன் தவணை உரிமை காலத்தை 2 ஆண்டுகள் வரை நீட்டிக்க செய்ய முடியும்"- மத்திய அரசு
கடன் தவணை உரிமை காலத்தை 2 ஆண்டுகள் வரை நீட்டிக்க செய்ய முடியும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
3. லடாக் எல்லையில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறல் - இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது
லடாக் எல்லையில் சீனா மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
4. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரஷாந்த் பூஷணுக்கு தண்டனை என்ன? உச்ச நீதிமன்றம் இன்று அறிவிப்பு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பிரசாந்த் பூஷணுக்கான தண்டனை விவரத்தை உச்ச நீதிமன்றம் இன்று அறிவிக்கிறது.
5. நீட், ஜேஇஇ தேர்வுகளை தள்ளிவைக்க கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
நீட், ஜேஇஇ தேர்வுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளில் திட்டமிட்ட படி நடைபெறும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...