டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா; வீடு, வீடாக சென்று பரிசோதனை நடத்த அரசு முடிவு


டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா; வீடு, வீடாக சென்று பரிசோதனை நடத்த அரசு முடிவு
x

டெல்லியில் கொரோனா பாதிப்பு பெருமளவில் அதிகரித்து வரும் நிலையில் வீடு, வீடாக சென்று பரிசோதனை நடத்த கெஜ்ரிவால் அரசு முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி,

நாட்டின் தலைநகர் டெல்லியில் நேற்று ஒரே நாளில் 3,947 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.  ஒரே நாளில் 68 பேர் பலியாகினர்.  இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 66 ஆயிரத்து 602 ஆகவும், பலி எண்ணிக்கை 2,301 ஆகவும் உயர்ந்தது.

இதேபோன்று 2,711 பேர் ஒரே நாளில் குணமடைந்து சென்றனர்.  இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 39 ஆயிரம் பேராக உயர்ந்தது.  24,988 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லியில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 900 பேருக்கு மேல் பாதிப்பு உறுதியானது அரசுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது.  இதனால், முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு புதிய திட்டமொன்றை கையிலெடுத்து உள்ளது.  இதன்படி, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அனைத்து வீடுகளிலும் வரும் 30ந்தேதி வரை பரிசோதனை செய்யவும், வருகிற ஜூலை 6ந்தேதி வரை டெல்லியில் உள்ள அனைத்து வீடுகளிலும் பரிசோதனை செய்யவும் முடிவு செய்துள்ளது.

கடந்த வாரம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் இடையே நடந்த கூட்டங்களை தொடர்ந்து, கொரோனா பாதிப்பினை குறைக்கும் ஒரு பகுதியாக இந்த திட்டம் வெளியிடப்பட்டு உள்ளது என்று டெல்லி அரசு தெரிவித்து உள்ளது.

இதற்கு முன்பு வரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வந்தது.  ஆனால் பரவல் அதிகரித்து வரும் நிலையில், டெல்லி முழுவதும் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என பிரதீப் தயால் என்ற அதிகாரி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

Next Story