கர்நாடகாவில் ஜூலை 5-ம் தேதி முதல் ஞாயிறு முழு ஊரடங்கு: முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு


கர்நாடகாவில் ஜூலை 5-ம் தேதி முதல் ஞாயிறு முழு ஊரடங்கு: முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
x
தினத்தந்தி 28 Jun 2020 3:48 AM GMT (Updated: 28 Jun 2020 3:48 AM GMT)

கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஞாயிறு முழு ஊரடங்கு வருகிற 5-ந்தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.

பெங்களூரு,

கொரோனா பரவலை தடுப்பது தொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் உயர்மட்ட குழு அவசர ஆலோசனை கூட்டம் பெங்களூரு காவேரி இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் கொரோனாவை தடுக்கும் பொருட்டு வருகிற 5-ந் தேதி முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவு, அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை அமலில் இருக்கும். வருகிற 10-ந் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கு சனிக்கிழமையும் விடுமுறை வழங்கப்படும்.

கர்நாடகத்தில் தற்போது இரவு ஊரடங்கு இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை அமல்படுத்தப்படுகிறது. இதில் சிறிது மாற்றம் செய்து, இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் தக்காளி மொத்த மார்க்கெட்டில் மக்கள் நெரிசல் ஏற்படுவதை தடுக்க பிற பகுதிகளில் மொத்த தக்காளி மார்க்கெட் திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதித்தவர்களை விரைவாக ஆஸ்பத்திரியில் சேர்க்க படுக்கைகள் ஒதுக்குவது தொடர்பாக ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட தொழில்நுட்ப மையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா நோயாளிகளை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கையை 250 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் அமரர் ஊர்திகளின் எண்ணிக்கைை-யும் அதிகரிக்கப்படும்.

ஆம்புலன்ஸ் வாகனங்கள் இருக்கும் இடம் மற்றும் அந்த வாகனங்கள் பிரச்சினை இன்றி இயங்க போலீஸ் கட்டுப்பாட்டு அறை வயர்லெஸ் வசதியை பயன்படுத்திகொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள கண்காணிப்பு அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்படும்.

கொரோனா தடுப்பு பணியில் மாநகராட்சி மண்டல இணை கமிஷனர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும். இதன் மூலம் மாநகராட்சி கமிஷனர் மீது உள்ள பணிச்சுமை குறையும். டாக்டர்களின் பற்றாக்குறையை போக்க புதிதாக நியமிக்கப்பட்ட 180 டாக்டர்களை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா கண்காணிப்பு மைய பொறுப்பாளர்களாக தாசில்தார்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

பெங்களூருவில் திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் பிற அமைப்புகளின் கட்டிடங்களை கொரோனா கண்காணிப்பு மையத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரெயில்வே துறையிடம் இருந்து ரெயில் பெட்டிகள் கேட்டு பெற்று கொரோனா வார்டுகளாக மாற்றப்படும். கொரோனாவால் இறப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய ஒரு குழு அமைக்கப்படும். மேலும் பெங்களூருவில் புதிதாக மயான பூமியை அடையாளம் காணும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் முழுமையாக நிரம்பினால், தங்கும் விடுதிகளில் வார்டுகள் அமைக்கப்படும். அந்த தங்கும் விடுதிகள், ஆஸ்பத்திரிகளுடன் தொடர்பு ஏற்படுத்தப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.


Next Story