மருத்துவர்கள் தினம்: ஜூலை 1 ஆம் தேதி தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் - முதல்-மந்திரி மம்தா பானர்ஜி


மருத்துவர்கள் தினம்: ஜூலை 1 ஆம் தேதி தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் - முதல்-மந்திரி மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 29 Jun 2020 1:35 PM GMT (Updated: 29 Jun 2020 1:35 PM GMT)

மருத்துவர்கள் தினமான ஜூலை 1 ஆம் தேதியை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கொல்கத்தா,

நாடு முழுவதும் தன்னலம் கருதாமல் சேவையாற்றி வரும் மருத்துவர்களை கௌரவிக்கும் வகையில் ஆண்டு தோறும் ஜூலை 1 ஆம் தேதி மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது உலகையே உலுக்கி வரும் வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றும் பணியில் மருத்துவத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மருத்துவர்கள் தினத்தை மாநிலத்தில் அரசு விடுமுறை நாளாக அறிவித்து மேற்குவங்காள அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறுகையில்:-  

’கொரோனா வைரசில் இருந்து மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர முன்கள வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஜூலை 1 ஆம் தேதியை மாநில அரசு விடுமுறை நாளாக அறிவித்துள்ளோம். 

மேலும் கொரோனா முன்களப் பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் ஜூலை 1 ஆம் தேதியை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேற்குவங்கத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரரும், தலைசிறந்த மருத்துவரும், அம்மாநிலத்தின் இரண்டாவது முதல்வருமான டாக்டர் பிதான் சந்திர ராய், அவரது பிறந்த தினம் மற்றும் நினைவு தினமான ஜூலை 1 ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Next Story