காங்கிரசுக்கு எதிராக ஓட்டு போட ரூ.35 கோடி பேரம்; எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு: சச்சின் பைலட் மறுப்பு


காங்கிரசுக்கு எதிராக ஓட்டு போட ரூ.35 கோடி பேரம்; எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு:  சச்சின் பைலட் மறுப்பு
x
தினத்தந்தி 20 July 2020 2:45 PM GMT (Updated: 20 July 2020 2:45 PM GMT)

காங்கிரசுக்கு எதிராக மாநிலங்களவை தேர்தலில் ஓட்டு போட ரூ.35 கோடி கொடுக்க சச்சின் பைலட் முன்வந்தார் என அக்கட்சி எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசின் முதல் மந்திரி அசோக் கெலாட், துணை முதல் மந்திரியாக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே நீண்ட காலமாக அதிகார மோதல் இருந்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த மோதல் பகிரங்கமாக வெடித்தது.

தொடர்ந்து, சச்சின் பைலட் தனக்கு 30 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதை நிரூபிக்க அவர்களது வீடியோவை வெளியிட்டார். சச்சின் பைலட்டின் முகாமில் சுமார் 15 எம்.எல்.ஏ.க்கள் ஒன்றாக அமர்ந்திருக்கும் வீடியோ வெளியிடப்பட்டது.  தொடர்ந்து கட்சி கூட்ட புறக்கணிப்பிலும் பைலட் ஈடுபட்டார்.

இதனை தொடர்ந்து சச்சின் பைலட் துணை முதல் மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ரன்தீப் சிங் சுர்ஜிவாலா கூறினார்.  இதேபோன்று, ராஜஸ்தான் பிரதேச காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டார்.

இந்த சர்ச்சை ஒருபுறம் இருக்க, காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. கிரிராஜ் சிங் மலிங்கா இன்று கூறும்பொழுது, மாநிலங்களவை தேர்தல் நடைபெறுவதற்கு முன், கட்சிக்கு எதிராக ஓட்டு போடுவதற்காக எனக்கு ரூ.35 கோடி கொடுக்க சச்சின் பைலட் முன்வந்தார்.  இதுபற்றி முதல் மந்திரி அசோக் கெலாட்டிடன் நான் கூறினேன் என்று தெரிவித்துள்ளார்.

கிரிராஜ் குற்றச்சாட்டை மறுத்துள்ள சச்சின் பைலட், இது எனக்கு வருத்தமளிக்கிறது.  ஆனால், எனக்கு எதிரான இந்த குற்றச்சாட்டுகளால் நான் ஆச்சரியமடையவில்லை.  என்னை களங்கப்படுத்தவும் மற்றும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் மற்றும் எம்.எல்.ஏ.வாக, கட்சி தலைமைக்கு எதிராக நான் எழுப்பிய சட்டப்பூர்வ விசயங்களை மறக்கடிக்க செய்யவும் இதுபோன்று கூறப்படுகிறது.

எனது புகழை கெடுக்கும் நோக்குடன் மற்றும் என் மீதுள்ள நம்பகத்தன்மையை குலைக்கும் வகையிலும் இந்த முயற்சி நடைபெற்றுள்ளது.  இந்த குற்றச்சாட்டுகளை கூறிய எம்.எல்.ஏ. மீது முறையான மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுப்பேன் என்று சச்சின் பைலட் கூறியுள்ளார்.

பொது வாழ்க்கையில் என் மீதுள்ள மதிப்பு கெடும் வகையில் இதுபோன்ற பல குற்றச்சாட்டுகள் என் மீது கூறப்படும் என்று உறுதியாக நான் அறிவேன்.  ஆனால் எனது நம்பிக்கைகளில் நான் உறுதியுடன் இருப்பேன் என அவர் கூறியுள்ளார்.

Next Story