கேரளாவில் விபத்தில் சிக்கிய விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு


கேரளாவில் விபத்தில் சிக்கிய விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு
x
தினத்தந்தி 8 Aug 2020 5:47 AM GMT (Updated: 8 Aug 2020 5:47 AM GMT)

கேரளாவில் விபத்தில் சிக்கிய விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டு உள்ளது.

கோழிக்கோடு,

‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்றிரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்பொழுது விபத்தில் சிக்கியது.  இதில் விமானம் இரண்டாக உடைந்தது.

இந்த விபத்தில் 2 விமானிகள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர்.  நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  அவர்கள் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் நகர மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

இந்த விபத்தில் சிக்கிய விமானத்தின் இயந்திரம் எந்த பாதிப்புக்கும் உட்படவில்லை.  விபத்து நடந்தது பற்றி விமான போக்குவரத்து பொது இயக்குனரக தலைவர் அருண் குமார் கூறும்பொழுது, மழையால், விமானம் தரையிறங்குவது முறையாக நடைபெறவில்லை.  விமானம் 2 பாகங்களாக உடைந்துள்ளது என தெரிவித்து உள்ளார்.

தொடர்ந்து மீட்பு பணிகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கின்றன.  விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டு உள்ளது.  இந்த பெட்டியில், விமானத்தின் டிஜிட்டல் தகவல் பதிவு சாதனம் மற்றும் விமானியின் குரல் பதிவு சாதனம் ஆகியவை இருக்கும்.  இதன் வழியே, விமானம் எந்த உயரத்தில் பறந்து கொண்டிருந்தது, விமானத்தின் நிலை, அதன் வேகம், விமானிகளுக்கு இடையே நடந்த உரையாடல்கள் உள்ளிட்ட பல முக்கியத்துவம் வாய்ந்த விசயங்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கும்.  இதனை மீட்டு ஆய்வு செய்த பின்னரே விமான விபத்து ஏற்பட்டதற்கான சரியான காரணம் என்னவென்று தெரிய வரும்.  விமான புலனாய்வு அதிகாரிகளின் விசாரணைக்கு உதவியாக இது இருக்கும்.

Next Story