ஆந்திராவில் கொரோனா சிகிச்சை மைய தீ விபத்தில் 7 பேர் பலி; பிரதமர் மோடி, அமித்ஷா இரங்கல்


ஆந்திராவில் கொரோனா சிகிச்சை மைய தீ விபத்தில் 7 பேர் பலி; பிரதமர் மோடி, அமித்ஷா இரங்கல்
x
தினத்தந்தி 9 Aug 2020 5:33 AM GMT (Updated: 9 Aug 2020 5:33 AM GMT)

ஆந்திராவில் கொரோனா சிகிச்சை மைய தீ விபத்தில் 7 பேர் பலியான சம்பவத்திற்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளனர்.

விஜயவாடா,

ஆந்திர பிரதேசத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளுக்கு ஏற்ப நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான போதிய மருத்துவமனைகள் இல்லாத சூழல் காணப்படுகிறது.  இதனால், அங்கிருக்கும் ஓட்டல்கள், கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றி அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதுபோன்று விஜயவாடா நகரில் உள்ள ஓட்டல் ஒன்றை, தனியார் மருத்துவமனை ஒன்று குத்தகைக்கு எடுத்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மையம் ஆக பயன்படுத்தி வந்தது.  அந்த மருத்துவமனையில் திடீரென இன்று காலை 5 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

இதில், 22 பேர் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.  அவர்களை கட்டிடத்தில் இருந்து வெளியேற்றும் பணியும் நடந்தது.  மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என முதற்கட்ட விசாரணை தெரிவிக்கிறது.  இந்த தீ விபத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர். 30 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.  அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

இதுபற்றி அறிந்த பிரதமர் மோடி நடந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.  அவர் வெளியிட்டு உள்ள செய்தியில், விஜயவாடாவில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அறிந்து வேதனையடைந்தேன்.  தங்களது அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் துயர நினைவுகளில் நானும் பங்கு கொள்கிறேன்.  காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என இறைவனை வேண்டி கொள்கிறேன்.

இந்த தீ விபத்து பற்றி ஆந்திர பிரதேச முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டிஜியை தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தேன்.  சாத்திப்பட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என அவரிடம் உறுதி கூறியுள்ளேன் என்று தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும், தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்து கொண்டார்.  காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.  ஆந்திர அரசுக்கு மத்திய அரசு இயன்ற உதவிகளை வழங்கும் என்றும் தெரிவித்து உள்ளார்.

Next Story