பெங்களூருவில் 57 வார்டுகளில் காய்ச்சல் சிகிச்சை மையம் இல்லை - கொரோனா பரிசோதனை செய்ய முடியாமல் மக்கள் அவதி


பெங்களூருவில் 57 வார்டுகளில் காய்ச்சல் சிகிச்சை மையம் இல்லை - கொரோனா பரிசோதனை செய்ய முடியாமல் மக்கள் அவதி
x
தினத்தந்தி 11 Aug 2020 2:59 PM GMT (Updated: 11 Aug 2020 2:59 PM GMT)

பெங்களூருவில் 57 வார்டுகளில் காய்ச்சல் சிகிச்சை மையம் இல்லாததால், கொரோனா பரிசோதனை செய்ய முடியாமல் மக்கள் அவதி அடைந்து உள்ளனர்.

பெங்களூரு, 

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் மாநகராட்சி அதிகாரிகள் விழிபிதுங்கி நிற்கின்றனர். பெங்களூருவில் தினமும் கொரோனா பரிசோதனையை அதிகரிப்பதன் மூலம் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் கூறி இருந்தார். மேலும் பெங்களூருவில் உள்ள 198 வார்டுகளிலும் காய்ச்சல் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்றும், அந்த காய்ச்சல் சிகிச்சை மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் கடந்த மாதம் (ஜூலை) அறிவித்து இருந்தார்.

ஆனால் பெங்களூருவில் இதுவரை 141 வார்டுகளில் தான் காய்ச்சல் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. எலகங்கா நியூ டவுன், எலகங்கா பழைய டவுன் உள்பட 57 வார்டுகளில் காய்ச்சல் சிகிச்சை மையம் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வார்டுகளில் வசித்து வரும் மக்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடியாமல் கடும் அவதி அடைந்து உள்ளனர்.

கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள அவர்கள் குறைந்தது 10 முதல் 15 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டியது உள்ளது. இதனால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நிறைய பேர் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். மேலும் சிக்கஜாலா, தேவனஹள்ளி, ராஜனகுட்டே, சிங்கநாயக்கனஹள்ளி பகுதிகளிலும் காய்ச்சல் சிகிச்சை மையத்தை அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து தேசிய நகர்ப்புற சுகாதார பணியின் நகர ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சுரேஷ் கூறியதாவது:-

57 வார்டுகளில் காய்ச்சல் சிகிச்சை மையம் இல்லை. இதனால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடியாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். இதனால் 57 வார்டுகளிலும் காய்ச்சல் சிகிச்சை மையத்தை உடனடியாக அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் அதற்கு மாற்று வழியை கண்டறிய வேண்டும் என்றார்.

Next Story