ராஜஸ்தானில் அசோக் கெலாட் உடன் சச்சின் பைலட் சந்திப்பு; காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்பு


ராஜஸ்தானில் அசோக் கெலாட் உடன் சச்சின் பைலட் சந்திப்பு; காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்பு
x
தினத்தந்தி 13 Aug 2020 12:27 PM GMT (Updated: 13 Aug 2020 12:27 PM GMT)

ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட்டின் வீட்டில் அவரை சந்தித்த சச்சின் பைலட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

ஜெய்ப்பூர்,

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்-மந்தரி அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்-மந்திரியாக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. இதனால் சச்சின் பைலட்டின் துணை முதல்-மந்திரி பதவி கடந்த ஜூலை மாதம் 14ந்தேதி பறிக்கப்பட்டது.  அவரது ஆதரவாளர்கள் 2 பேரின் மந்திரி பதவியும் பறிக்கப்பட்டது. மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டார்.

இந்த சர்ச்சை ஒருபுறம் இருக்க ராஜஸ்தானில் நாளை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.  ஆளும் காங்கிரசில் கடந்த ஒரு மாதத்தில் உட்கட்சி பூசல் ஏற்பட்டு பைலட் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் பிரிந்து சென்ற நிலையில், இந்த கூட்டத்தொடர் முக்கியத்துவம் பெறுகிறது.  அசோக் கெலாட் தனது அரசுக்கு பெரும்பான்மையை  காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்த பரபரப்பு நிறைந்த அரசியல் சூழலில், அசோக் கெலாட்டிற்கு பெரும்பான்மை இல்லை என கூறி வந்த சச்சின் பைலட், திடீர் திருப்பமாக காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்புக்கு பின்னர் சமரசம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் அமைந்துள்ள முதல் மந்திரி அசோக் கெலாட்டின் இல்லத்தில் இன்று மாலை 5 மணிக்கு அவரது தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.  இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி சச்சின் பைலட்டுக்கு அழைப்பு விடப்பட்டது.

இதனையேற்று கொண்டு சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கெலாட்டின் வீட்டிற்கு இன்று சென்றனர்.  சச்சின் பைலட்டை அசோக் கெலாட் இன்முகத்துடன் வரவேற்றார்.  இருவரும் கைகுலுக்கி கொண்டனர்.  இதன்பின்னர் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்து வருகிறது.

Next Story