காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக சோனியா விருப்பம் - புதிய தலைவரை தேர்வு செய்ய அறிவுறுத்தல்


காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக சோனியா விருப்பம் - புதிய தலைவரை தேர்வு செய்ய அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 24 Aug 2020 12:00 AM GMT (Updated: 23 Aug 2020 11:39 PM GMT)

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் நிலையில், கட்சியின் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து விலக சோனியா காந்தி விருப்பம் தெரிவித்து உள்ளார். கட்சியினர் ஒன்றிணைந்து புதிய தலைவரை தேர்வு செய்யுமாறும் அறிவுறுத்தி உள்ளார்.

புதுடெல்லி,

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, கட்சி தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். இதைத்தொடர்ந்து, அவரது தாயார் சோனியா காந்தி கட்சியின் இடைக்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் பெற்ற காரிய கமிட்டி இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் கூடுகிறது.

சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கொரோனா பிரச்சினை, லடாக் விவகாரம், நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலை, வேலையில்லா திண்டாட்டம், கொரோனா காலத்தில் நடைபெறும் தேர்தல்களுக்காக தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் காங்கிரசுக்கு களத்தில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய மற்றும் கட்சி அலுவலகங்களுக்கு வரக்கூடிய முழுநேர தலைமை தேவை எனவும், கட்சியின் முக்கிய அமைப்புகளை மறுசீரமைப்பு செய்யுமாறும் 23 மூத்த தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர். கட்சியின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு காரிய கமிட்டியை புதுப்பிக்குமாறும் அதில் அவர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

அதிகப்படியான மையப்படுத்தப்பட்ட அமைப்புகளும், மிகச்சிறிய மேலாண்மையும் எதிர் தரப்புக்கே எப்போதும் வாய்ப்புகளை வழங்குவதாக கூறியுள்ள அவர்கள், தலைமையின் நிச்சயமற்ற தன்மை காங்கிரஸ் தொண்டர்களுக்கு மனச்சோர்வை அளிப்பதாகவும், இது கட்சியை மேலும் பலவீனமாக்குவதாகவும் வருத்தம் தெரிவித்து உள்ளனர்.

பா.ஜனதாவுக்கு எதிரான மக்களின் கருத்துகளை ஒருங்கிணைப்பதில் கட்சியின் காரிய கமிட்டி பயனுள்ள வகையில் வழிகாட்டவில்லை என குற்றம் சாட்டியுள்ள அவர்கள், நாடாளுமன்ற தேர்தல் முடிந்து 14 மாதங்கள் கடந்த பிறகும் கட்சி சார்பில் இதுவரை நேர்மையான மறுஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் புகார் தெரிவித்து உள்ளனர். மேலும் கட்சியின் அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தவும் அறிவுறுத்தி உள்ளனர்.

எனினும் இந்த கடிதத்தில் ராகுல் காந்தியை தலைவராக்குவது பற்றி அவர்கள் எதுவும் குறிப்பிடவில்லை. இந்த கடிதத்தில் குலாம் நபி ஆசாத், கபில் சிபல், சசி தரூர், ஆனந்த் சர்மா, மணிஷ் திவாரி, மிலிந்த் தியோரா உள்பட முன்னாள் மத்திய மந்திரிகள், முன்னாள் முதல்-மந்திரிகள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கையெழுத்து போட்டு உள்ளனர்.

காங்கிரஸ் இடைக்கால தலைவராக ஓராண்டு பதவியில் இருந்துள்ள நிலையில், அந்த பதவியில் இருந்து விலக சோனியா நேற்று விருப்பம் தெரிவித்து உள்ளார். கட்சியினரின் இந்த கடிதம் குறித்து அவர் பேசும்போது, ’கட்சித்தலைவருக்கான கடமைகளை செய்ய இனியும் நான் விரும்பவில்லை’ என்று கூறியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனவே கட்சியினர் அனைவரும் ஒன்றுகூடி கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்யுமாறு மூத்த தலைவர்களை அவர் கேட்டுக்கொண்டதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. எனவே இது குறித்து இன்றைய காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது. எனினும் சோனியா பதவி விலக விருப்பம் தெரிவித்த தகவலை கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா மறுத்துள்ளார்.

இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்திக்கு மீண்டும் வழங்க வேண்டும் என்று கட்சியில் இளம் தலைவர்கள் பலர் வற்புறுத்தி வருகிறார்கள். குறிப்பாக மாணிக்கம் தாகூர் எம்.பி., மராட்டிய மாநில பொறுப்பை கவனிக்கும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சல்லா வம்சி சந்த் ரெட்டி உள்ளிட்ட பலர் ராகுல் காந்தியை மீண்டும் கட்சி தலைவராக்க வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக உள்ளனர். இது தொடர்பாக சல்லா வம்சி சந்த் ரெட்டி காரிய கமிட்டிக்கு கடிதமும் எழுதி இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சிக்கான தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு தேர்தல் நடத்துவதற்கு பதிலாக ஒருமித்த முடிவின்படி தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சல்மான் குர்ஷித்தும் கூறியுள்ளார். ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக்க தனது முழு ஆதரவு உண்டு என அவர் மேலும் குறிப்பிட்டு உள்ளார்.

எனினும் அமரிந்தர் சிங், அசோக் கெலாட், குமாரி செல்ஜா, பூபேஷ் பாகல் உள்ளிட்ட தலைவர்கள் சோனியாவே தலைவராக தொடர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதைப்போல கட்சிக்கு தலைவர் தேர்வு செய்வது தொடர்பாக 23 பேர் கடிதம் அனுப்பியது குறித்தும் கட்சி தலைவர்களிடையே அதிருப்தி ஏற்பட்டு உள்ளது.

மொத்தத்தில் காங்கிரசின் தலைமை விவகாரத்தில் மூத்த தலைவர்களிடையே பெரும் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இத்தகைய பரபரப்பான சூழலில் இன்று நடைபெறும் காரிய கமிட்டி கூட்டத்தில் தலைமை பற்றிய முடிவு எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் நிலவி வருகிறது.

Next Story