தேசிய செய்திகள்

உலகின் பொம்மை தயாரிப்பு மையமாக இந்தியா மாற முடியும் - ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு + "||" + India can become a toy manufacturing hub in the world - Prime Minister Modi's speech on 'Mann ki baat'

உலகின் பொம்மை தயாரிப்பு மையமாக இந்தியா மாற முடியும் - ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

உலகின் பொம்மை தயாரிப்பு மையமாக இந்தியா மாற முடியும் - ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
உலகின் பொம்மை தயாரிப்பு மையமாக இந்தியா மாற முடியும், அதற்கான திறமையும், திறனும் உள்ளது என்று ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று நாட்டு மக்களுக்கு அகில இந்திய வானொலி மூலம் ‘மனதின் குரல்’ (மன்கிபாத்) நிகழ்ச்சி வழியாக உரையாற்றி வருகிறார். அந்த வகையில் நேற்றும் அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-


இது பண்டிகைக்காலம். கொரோனா நெருக்கடியின் இந்த காலங்களில் ஒரு புறம் மக்கள் மிகுந்த உற்சாகத்துடனும் ஊக்கத்துடனும் உள்ளனர். இன்னொரு பக்கம் மக்களிடம் நிலவும் ஒழுக்கம் இதயத்தை தொடுகிறது. இந்த நேரத்தில் பொறுமை, எளிமை காணப்படுவது இதுவரை இல்லாத ஒன்று.

விநாயகர் சதுர்த்தி கூட சில இடங்களில் ஆன்லைன் வழியாக கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் இயற்கையான சூழலில் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. நமது பண்டிகைகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் இடையே எப்போதும் ஆழமான தொடர்பு இருப்பதை பார்க்க முடியும்.

பொம்மைகள் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அவை மனதை கட்டி எழுப்புகின்றன. ரவீந்திரநாத் தாகூர் தனது குழந்தை பருவத்தில் தானே சொந்தமாக பொம்மைகளை உருவாக்கி, தனது நண்பர்களுடன் விளையாடியதாக கூறி இருக்கிறார்.பொம்மைகள் ஒரு குழந்தையின் குழந்தைப்பருவத்தையும், படைப்பாற்றலையும் வெளியே கொண்டு வருவதாக இருக்க வேண்டும்.

தேசிய கல்வி கொள்கையில் பொம்மைகளின் தாக்கம் குறித்து நிறையவே கவனம் செலுத்தப்பட்டுள்ளது. விளையாடும்போது கற்றல், பொம்மைகளை உருவாக்க கற்றல், பொம்மை தொழிற்சாலைகளுக்கு சென்று பார்வையிடல், இவை அனைத்தும் பாடத்திட்டத்தின் ஒருபகுதியாக மாற்றப்பட்டுள்ளன.

சீனா மிகப்பெரிய தயாரிப்பாளராக, ஏற்றுமதியாளராக உள்ள உலக பொம்மை வர்த்தகத்தில், இந்தியாவின் பங்களிப்பை உயர்த்துவதை நோக்கமாக கொண்ட ஒரு கூட்டத்துக்கு சமீபத்தில் தலைமை ஏற்றேன்.

நமது நாட்டில் உள்ளூர் பொம்மைகளின் வளமான பாரம்பரியம் இருக்கிறது. நம் நாடு, நல்ல பொம்மைகளை தயாரிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த பல திறமையான கைவினைஞர்களை கொண்டுள்ளது. நமது நாட்டின் பல பகுதிகள் பொம்மை மையங்களாக உருவாகி இருக்கின்றன. கர்நாடக மாநிலத்தில் ராமநகரம் சன்னபட்னா, ஆந்திராவில் கிருஷ்ணாவில் கோண்டபள்ளி, தமிழகத்தில் தஞ்சாவூர், அசாமில் துபாரி, உத்தரபிரதேசத்தில் வாரணாசி போன்ற பல இடங்கள் இப்படி உள்ளன.

உலகளாவிய பொம்மை வர்த்தகத்தின் மதிப்பு ரூ.7 லட்சம் கோடிக்கும் மேல் என்பதை அறியும்போது நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஆனால் இதில் இந்தியாவின் பங்கு மிகக் குறைவு.

ஆனால் பொம்மை தொழில் துறை மிக பெரியது. அது குடிசை தொழிலாக, சிறு தொழிலாக, குறு சிறு நடுத்த நிறுவனங்களாக, பெரிய தொழில் நிறுவனங்களோடு, தனியார் தொழில் முனைவோர் கூட இதில் வருகிறார்கள். தொடக்க நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்) உள்ளூர் பொம்மைகளின் குரலாக இருக்க வேண்டிய நேரம் இது. அவை கம்ப்யூட்டர் விளையாட்டுகளை உருவாக்க வேண்டும்.

நமது நாட்டில் பல யோசனைகள் உள்ளன. பல கருத்துகள் உள்ளன. நமது வரலாறு மிகவும் வளமையானது. அதன் அடிப்படையில் நாம் பொம்மைகள் உருவாக்க முடியுமா? இந்த நாட்டின் இளம் திறமையாளர்களை நான் அழைக்கிறேன். இந்தியாவில் விளையாட்டுகளை உருவாக்குங்கள். இந்தியாவை அடிப்படையாக கொண்ட விளையாட்டுகளை உருவாக்குங்கள். இந்த விளையாட்டு தொடங்கட்டும். உலக பொம்மைகள் மையமாக இந்தியா மாறும். அதற்கான திறனும், திறமையும் உள்ளது.

இந்திய விவசாய நிதியம் உருவாக்கப்பட்டு வருகிறது. அதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பயிரிடப்படும் பயிர்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய ஊட்டச்சத்து மதிப்பு பற்றிய முழுமையான தகவல்கள் இருக்கும். இந்த நிதியம், உங்கள் அனைவருக்கும் பெரிதும் பயன்படும்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று விதிமுறைகளை, குறிப்பாக முக கவசம் அணிவதையும், தனி மனித இடைவெளியையும் அனைவரும் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.