தேசிய செய்திகள்

லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீற முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பாரதீய ஜனதா பதிலடி + "||" + Bharatiya Janata Party retaliates against Congress allegation

லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீற முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பாரதீய ஜனதா பதிலடி

லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீற முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பாரதீய ஜனதா பதிலடி
லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீற முயன்ற விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டுக்கு பாரதீய ஜனதா பதிலடி கொடுத்து உள்ளது.
புதுடெல்லி,

லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பங்கோங் சோ ஏரியின் தெற்கு கரை பகுதியில் இந்த 29-ந் தேதி இரவு சீன வீரர்கள் மேற்கொண்ட அத்துமீறல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது.

இந்த ஊடுருவல் முயற்சியை தொடர்ந்து, நாட்டின் பாதுகாப்பில் மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசு அலட்சியமாக இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி இருக்கிறது. பாரதீய ஜனதா அரசின் வெளிநாட்டு கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பு கொள்கை நம்பகத்தன்மையற்ற சீன பொருட்கள் போல் இருப்பதாக அந்த கட்சி கூறி இருக்கிறது.


இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், “பங்கோங் சோ ஏரி பகுதியில் மீண்டும் ஒரு ஊடுருவல் முயற்சி நடந்து இருக்கிறது. பங்கோங் சோ ஏரி, கோக்ரா, கல்வான் பள்ளத்தாக்கு, தெப்சாங் சமவெளி, லிபு லேக், டோகா லா, நாகுலா கணவாய் என ஒவ்வொரு நாளும் சீன ராணுவம் ஊடுருவுகிறது. இந்திய தாய்நாட்டை பாதுகாக்க எல்லையில் நமது ராணுவ வீரர்கள் அச்சமின்றி நிற்கிறார்கள். ஆனால் பிரதமர் மோடி தனது சிவந்த கண்களை (கோபம்) காட்டுவாரா?” என்று கூறி உள்ளார்.

அக்கட்சியின் மற்றொரு செய்தித்தொடர்பாளரான ஜெய்வீர் ஷெர்கில் தனது டுவிட்டர் பதிவில், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஏற்கனவே உள்ள நிலையை மாற்றி அமைக்கும் தவறான நடவடிக்கையில் சீன ராணுவம் ஈடுபட்டு உள்ளதாகவும், ஆனால் மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசு அந்த உண்மையை ஒப்புக்கொள்ள தயங்குவதாகவும் கூறி உள்ளார். தற்சார்பு இந்தியா, பொம்மைகள், இந்திய நாய் இனங்களின் மீதான பாசம் ஆகியவற்றை பேசி மக்களை திசைதிருப்பி குழப்புவதை கைவிட்டு எல்லையில் இருந்து சீன ராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்றும் அதில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் சாம்பிட் பத்ரா டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் கூறியதாவது:-

இந்திய ராணுவமும், பிரதமர் மோடியும் கோபத்துடன் தங்கள் சிவந்த கண்களை சீன ராணுவத்துக்கு காட்டி வருகிறார்கள். ஆனால் ஆச்சரியம் அளிக்கும் வகையில் அதை தாங்கிக்கொள்ள முடியாத வகையில் காங்கிரஸ் தலைவர்களின் கண்கள் கண்ணீர் வடிக்கின்றன.

சீன ராணுவம் முன்னேறுவதை தடுத்து நிறுத்தும் தைரியமும், ஆற்றலும் நமது அரசுக்கும், ராணுவத்துக்கும் உள்ளது. இந்திய இறையாண்மை பாதுகாக்கப்படும். அதைப் பார்த்து காங்கிரஸ் ஏன் அழுகிறது.

இந்தியா பாதுகாப்பான கரங்களில் இருப்பதால் ராகுல் காந்தி கவலைப்பட வேண்டாம். தனது கட்சியின் எதிர்காலம் பற்றி மட்டும் அவர் கவலைப்பட்டால் போதும். நாட்டை பாதுகாக்கும் ராணுவத்துக்கு பாரதீய ஜனதா கட்சியினரும், நாட்டு மக்களும் வணக்கம் செலுத்துகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.