பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடை - மத்திய அரசு அதிரடி


பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடை - மத்திய அரசு அதிரடி
x
தினத்தந்தி 3 Sept 2020 5:30 AM IST (Updated: 3 Sept 2020 5:18 AM IST)
t-max-icont-min-icon

பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை விதித்துள்ளது.

புதுடெல்லி,

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

அதனைத் தொடர்ந்து இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி டிக்-டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்தது. மேலும், பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் பல செயலிகள் தடை விதிக்கப்படும் எனவும், அது குறித்து பரிசீலித்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.

இதனிடையே சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை அடிமையாக்கி வைத்திருக்கும் பப்ஜி எனப்படும் செல்போன் விளையாட்டு செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பப்ஜி, பப்ஜி மொபைல் லைட், வீசாட், பைடு, ரைஸ் ஆப் கிங்டம் உள்ளிட்ட 118 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடைவிதித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69 ஏ இன் கீழ் இந்த தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்கு தளங்களில் கிடைக்கும் சில செல்போன் செயலிகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது தொடர்பாக அமைச்சகத்துக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 118 செயலிகள் இந்தியாவின் இறையாண்மை ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் இந்த செயலிகள் மூலம் பயனர்களிள் தரவுகள் மற்ற நாடுகளுக்கு பகிரப்படுவது தெரியவந்தது. அத்துடன் இந்த செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய சைபர் கிரைம் மையமும் பரிந்துரை செய்தது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

‘பப்ஜி’ செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்று சமீபத்தில் மறைந்த காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமார் கடந்த டிசம்பர் மாதம் 3-ந்தேதியன்று நாடாளுமன்றத்தில் பேசினார். அப்போது எச்.வசந்தகுமார், “வலைதள விளையாட்டுகள் பள்ளி குழந்தைகளின் கவனத்தை வேறு திசையில் கொண்டு செல்கின்றன என்று பெருவாரியான பெற்றோர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

உடல் பருமன், இருதய நோய், உளவியல் கோளாறுகள் போன்ற சுகாதார சீர்கேடுகள் இளைய சமுதாயத்தை பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன. 100-க்கும் மேலான இளைஞர்களின் உயிரை ‘புளூவேல்’ வலைதள விளையாட்டு குடித்துள்ளது. ஆகவே ‘புளூவேல்’ மற்றும் ‘பப்ஜி’ போன்ற வலைதள விளையாட்டுகளை அரசு உடனடியாக தடை செய்யவேண்டும்” என்று பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story