2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு


2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு
x
தினத்தந்தி 21 Sep 2020 10:39 PM GMT (Updated: 21 Sep 2020 10:39 PM GMT)

2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

புதுடெல்லி,

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு இருந்த முன்னாள் தொலைத்தொடர்பு துறை மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, ஸ்வான் டெலிகாம் நிறுவன தலைவர் ஷாகித் உஸ்மான் பல்வா உள்ளிட்ட 19 பேரை தனிக்கோர்ட்டு விடுதலை செய்து வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அமலாக்கப்பிரிவும், சி.பி.ஐ.யும் டெல்லி ஐகோர்ட்டில் தனித்தனியாக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்து உள்ளன. இந்த மனுக்களை விரைவாக விசாரிக்க கோரி அவற்றின் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை கடந்த 10-ந்தேதி விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி பிரிஜேஷ் சேத்தி, பதில் மனு தாக்கல் செய்யுமாறு ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் இந்த மனுக்கள் நீதிபதி பிரிஜேஷ் சேத்தி முன்னிலையில் காணொலி காட்சி மூலம் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரி சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி, ஷாகித் பல்வா உள்ளிட்டோர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கொரோனா நோய்த்தொற்று பரவலாகி வரும் இந்த சூழலில் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளிகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றும், இந்த நடைமுறையை சீர்குலைக்கக் கூடாது அவர்கள் தரப்பில் கூறப்பட்டது.

சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு தரப்பில் வாதாடிய வக்கீல், இந்த வழக்கு நாட்டின் மிகப்பெரிய வழக்கு என்றும், எனவே மேல்முறையீட்டு மனுக்களை அவசர வழக்காக கருதி விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதைத்தொடர்ந்து நீதிபதி பிரிஜேஷ் சேத்தி, இந்த மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணை தொடர்பாக எந்த சாட்சியங்களையும் சேகரிக்க தேவை இல்லை என்றும், காணொலி காட்சி மூலம் வாதங்களை மட்டுமே நடத்தினால் போதுமானது என்று கூறினார். அத்துடன் செவ்வாய்க்கிழமை (இன்று) விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறினார்.

Next Story