தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இப்போது இடைத்தேர்தல் இல்லை; தேர்தல் கமிஷன் அறிவிப்பு


தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இப்போது இடைத்தேர்தல் இல்லை; தேர்தல் கமிஷன் அறிவிப்பு
x
தினத்தந்தி 29 Sep 2020 11:45 PM GMT (Updated: 29 Sep 2020 8:43 PM GMT)

தமிழகத்தில் காலியாக இருக்கும் தொகுதிகளுக்கு இப்போது இடைத்தேர்தல் நடத்தப்படாது என்று தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.

புதுடெல்லி,

தமிழகத்தின் திருவொற்றியூர் சட்டசபை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி கடந்த பிப்ரவரி மாதம் 27-ந் தேதி மரணம் அடைந்தார். இதைப்போல குடியாத்தம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. காத்தவராயன் அதற்கு அடுத்த நாள், அதாவது பிப்ரவரி 28-ந் தேதி மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனா காரணமாக ஜூன் 10-ந் தேதி உயிரிழந்தார்.

இதனால் தமிழகத்தில் 3 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. இதேபோல் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாரின் மறைவை தொடர்ந்து கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியும் காலியாக உள்ளது.

இந்த நிலையில், நாடு முழுவதும் காலியாக உள்ள 63 சட்டசபை தொகுதிகளுக்கும், பீகார் மாநிலத்தின் வால்மீகி நகர் நாடாளுமன்ற தொகுதிக்கும் பீகார் மாநில சட்டசபை பொதுத்தேர்தலின் போது இடைத்தேர்தல் நடத்த இந்திய தலைமை தேர்தல் கமிஷன் முடிவு செய்தது.

காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளின் பட்டியலில் தமிழகத்தில் குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகள் மட்டுமே இடம் பிடித்தன. சேப்பாக்கம் சட்டசபை தொகுதி மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிகள் காலியாகி ஓரிரு மாதங்களே ஆவதால் தேர்தல் கமிஷனின் இடைத்தேர்தல் பட்டியலில் அவை சேர்க்கப்படவில்லை.

இந்த நிலையில் பீகார் மாநில சட்டசபை பொதுத்தேர்தல் தேதி கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. அங்கு அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7-ந் தேதிகளில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த தேர்தலுடன், நாடு முழுவதும் காலியாக உள்ள 56 சட்டசபை தொகுதிகளுக்கும், ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் (வால்மீகி நகர்) இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

அதன்படி பல்வேறு மாநிலங்களில் உள்ள 54 சட்டசபை தொகுதிகளுக்கும், பீகாரில் உள்ள வால்மீகி நகர் நாடாளுமன்ற தொகுதிக்கும் நவம்பர் 3-ந் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 2 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 7-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும்.

ஆனால் தமிழகம், கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 4 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கு (தமிழகம், கேரளா, அசாம் மாநிலங்களில் தலா 2 தொகுதிகள், மேற்கு வங்காளத்தில் ஒரு தொகுதி) இப்போது இடைத்தேர்தல் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அந்த மாநில அரசுகள் கேட்டுக் கொண்டதன் பேரில் மேற்கண்ட 4 மாநிலங்களிலும் இப்போது இடைத்தேர்தல் நடத்துவது இல்லை என்று முடிவு செய்து இருப்பதாக தலைமை தேர்தல் கமிஷனின் முதன்மைச் செயலாளர் சுமித் முகர்ஜி அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளார்.

தமிழக சட்டசபையின் பதவிக் காலம் 24.5.2021-ந் தேதியுடனும், அசாம் சட்டசபையின் பதவிக் காலம் 31.5.2021-ந் தேதியுடனும், கேரள சட்டசபையின் பதவிக் காலம் 1.6.2021-ந் தேதியுடனும் வரையிலும், மேற்கு வங்காள சட்டசபையின் பதவிக் காலம் 30.5.2021-ந் தேதியுடன் முடிவடைவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Next Story