மேலும் 70 ஆயிரம் பேருக்கு தொற்று; இந்தியாவின் தினசரி கொரோனா பலி எண்ணிக்கை குறைந்தது


மேலும் 70 ஆயிரம் பேருக்கு தொற்று; இந்தியாவின் தினசரி கொரோனா பலி எண்ணிக்கை குறைந்தது
x
தினத்தந்தி 29 Sep 2020 11:15 PM GMT (Updated: 29 Sep 2020 8:50 PM GMT)

இந்தியாவில் மேலும் 70 ஆயிரத்து 589 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். எனினும் நாட்டின் தினசரி கொரோனா பலி எண்ணிக்கை குறைந்திருக்கிறது.

புதுடெல்லி,

9 மாதங்களுக்கும் மேலாக மக்களை அதிர்ச்சியிலும், கட்டுப்பாட்டிலும் வைத்திருக்கும் கொரோனா தொற்று இன்னும் தனது ஆட்டத்தை முடிக்கவில்லை. தடுப்பு மருந்துகளோ, தடுப்பூசியோ இன்னும் கைவரப்பெறாததால் மனித குலத்துக்கு தொடர்ந்து சவாலாகவே விளங்கி வருகிறது. கண்ணுக்கு தெரியாத அந்த எதிரியை வெல்வதற்கு அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளால் கூட முடியவில்லை.

தற்போதைய நிலையில் வெறும் சுய கட்டுப்பாடுகள் மட்டுமே தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளும் ஒரே வழியாகி இருக்கிறது. எனவேதான் அரசுகள் அனைத்தும் தொற்றுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டு உள்ளன.

இந்தியாவிலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இங்கும் தினமும் 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாதிப்புகளும், ஆயிரத்தை தாண்டிய மரணங்களும் நிகழ்ந்து வந்தன. இதனால் 61 லட்சத்தை தாண்டிய பாதிப்புகளையும், 1 லட்சத்தை நெருங்கும் உயிரிழப்புகளையும் இந்தியா பெற்றிருக்கிறது.

இத்தகைய தினசரி கணக்கீட்டில் சற்று ஆறுதலான அம்சமாக கடைசியாக கணக்கெடுக்கப்பட்ட 24 மணி நேரத்தில் இந்தியாவின் உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்திருக்கிறது. அந்த வகையில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் வெறும் 776 பேர் மட்டுமே கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். நீண்ட நாட்களுக்கு பின் இது முதல்முறை நிகழ்வாக மாறி இருக்கிறது.

இந்த 776 பேரையும் சேர்த்து நாட்டில் கொரோனாவுக்கு இன்னுயிரை ஈந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 96 ஆயிரத்து 318 ஆக உயர்ந்திருக்கிறது. எனினும் நாட்டின் கொரோனா இறப்பு விகிதம் தொடர்ந்து 1.57 சதவீதமாகவே நீடிக்கிறது.

அதே நேரம் மேற்படி 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 70 ஆயிரத்து 589 பேர் புதிதாக கொரோனாவிடம் சிக்கி இருக்கின்றனர். இதனால் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 61 லட்சத்து 45 ஆயிரத்து 291 ஆகி இருக்கிறது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக மராட்டியம் 11 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களையும், கர்நாடகா 6 ஆயிரத்துக்கு அதிகமானவர்களையும் கொண்டிருக்கிறது. இதைப்போல உயிரிழந்த 776 பேரிலும் 23 சதவீதம், அதாவது 180 பேர் மராட்டியத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

இதற்கிடையே நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகளில் மேலும் 84 ஆயிரத்து 877 பேர் குணமடைந்தனர். இவர்களையும் சேர்த்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 51 லட்சத்து ஆயிரத்து 397 ஆக உயர்ந்திருக்கிறது. இதன் மூலம் நாட்டில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் விகிதம் 83.01 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. புதிதாக குணமடைந்தவர்களில் 73 சதவீதம் பேர் மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, உத்தரபிரதேசம், டெல்லி, ஒடிசா, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இதிலும் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட குணமடைந்தவர்களுடன் மராட்டியமே முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக கர்நாடகா, ஆந்திராவில் தலா 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

தற்போது சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 9 லட்சத்து 47 ஆயிரத்து 576 ஆகவே இருக்கிறது. இது வெறும் 15.42 சதவீதம் ஆகும். இதன் மூலம் சிகிச்சையில் இருப்பவர்களை விட 5 மடங்குக்கும் அதிகமானோர் தொற்றை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேற்படி 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 11 லட்சத்து 42 ஆயிரத்து 811 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு இருக்கின்றன. இதன் மூலம் இதுவரை நடந்திருக்கும் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 7 கோடியே 31 லட்சத்து 10 ஆயிரத்து 41 ஆக அதிகரித்து உள்ளது.

Next Story