டெல்லியில் ஐ.சி.யூ. படுக்கைகளை அதிகரிக்க போர்க்கால அடிப்படையில் பணி; முதல் மந்திரி அறிவிப்பு


டெல்லியில் ஐ.சி.யூ. படுக்கைகளை அதிகரிக்க போர்க்கால அடிப்படையில் பணி; முதல் மந்திரி அறிவிப்பு
x
தினத்தந்தி 19 Nov 2020 11:32 AM GMT (Updated: 19 Nov 2020 11:32 AM GMT)

டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கான ஐ.சி.யூ. படுக்கைகளை அதிகரிக்க போர்க்கால அடிப்படையில் பணிகள் நடந்து வருகின்றன என முதல் மந்திரி அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த சூழலில் சமீப நாட்களாக தொற்று எண்ணிக்கை சரிந்து வருகிறது.  கொரோனா பாதிப்பில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது. இந்த நிலையில், சமீப காலங்களாக டெல்லியில் பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது.

இது தவிர்த்து காற்று மாசும் அதிகரித்து காணப்படுகிறது.  இதனை எதிர்கொள்ள ஆம் ஆத்மி தலைமையிலான முதல் மந்திரி கெஜ்ரிவால் அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.  இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் செய்வதற்கான நேரம் இதுவல்ல.  அதற்கென நேரம் உள்ளது.  இது மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய நேரம் என்று கூறினார்.

தொடர்ந்து, பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு தற்போது ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில், இனி முக கவசம் அணியாவிட்டால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என்று கெஜ்ரிவால் அதிரடியாக அறிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள தீன்தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு வருகை தந்த கெஜ்ரிவால் அங்குள்ள நோயாளிகள், சிகிச்சை வசதி, படுக்கை வசதி உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசும்பொழுது, டெல்லி தீன்தயாள் உபாத்யாய் மருத்துவமனையில் தற்பொழுது கொரோனா நோயாளிகளுக்கான ஐ.சி.யூ. படுக்கைகள் எண்ணிக்கை 50 ஆக உள்ளது. இது 100 ஆக அதிகரிக்கப்படும்.  படுக்கை எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக போர்க்கால அடிப்படையில் பணிகள் நடந்து வருகின்றன என கூறியுள்ளார்.

Next Story