நிவர் புயல் உதவி; ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு நன்றி தெரிவித்து புதுச்சேரி ஆளுனர் கடிதம்


நிவர் புயல் உதவி; ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு நன்றி தெரிவித்து புதுச்சேரி ஆளுனர் கடிதம்
x
தினத்தந்தி 27 Nov 2020 2:17 AM GMT (Updated: 27 Nov 2020 2:17 AM GMT)

நிவர் புயலை முன்னிட்டு புதுச்சேரிக்கு தேவையான உதவிகளை வழங்கியதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு ஆளுனர் கிரண்பேடி நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

புதுச்சேரி,

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து, தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிவர் புயல் உருவான நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.  தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், நிவர் புயல் நேற்று முன்தினம் மாலை அதிதீவிர புயலாக வலுவடைந்தது. அதிதீவிர புயலாக மாறிய பின்னர் நேற்று  முன்தினம் மாலை 5.30 மணிக்கு கரையை நோக்கி 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது.

இதனால், மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.  பலத்த காற்றும் வீசியது.  ஆனால் அதன்பிறகு புயலின் நகர்வில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது.  இதன்பின்னர் நேற்று முன்தினம் இரவு 10.45 மணிக்கு அதிதீவிர புயலின் ஆரம்பப்பகுதி புதுச்சேரி-மரக்காணம் இடையே கரையை கடக்க தொடங்கியது.

அதன் தொடர்ச்சியாக புயலின் மையப்பகுதி நள்ளிரவில் கடக்க தொடங்கியது.  அதிதீவிர புயலாக கரையை கடக்க தொடங்கிய நிவர் புயல், தீவிர புயலாக வலுவிழந்து கரையை கடந்தது.  இந்த புயலால் புதுச்சேரியில் கனமழை கொட்டியது.  புதுச்சேரி மற்றும் காரைக்காலில் புயல் மற்றும் கனமழையையொட்டி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.  அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.

புதுச்சேரியில் புயலை தொடர்ந்து ஏற்பட்ட கனமழையால், அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வரும் 28ந்தேதி வரை விடுமுறை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழையை தொடர்ந்து புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலும் குடியிருப்புகள், கட்டிடங்களை சூழ்ந்து வெள்ள நீர் தேங்கியது.  இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.  எனினும், முன்னெச்சரிக்கையாக மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.  அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

நிவர் புயலை முன்னிட்டு புதுச்சேரிக்கு தேவையான நிவாரண உதவி உள்ளிட்டவைகளை வழங்கியதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு நன்றி தெரிவித்து ஆளுனர் கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளார்.  அதில், நிவர் புயலின் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ள தயாராவதற்காக புதுச்சேரி அரசுக்கு உதவிக்கரம் நீட்டியதற்காக மத்திய அரசுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

தேசிய பேரிடர் மேலாண் கழகம் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கடலோர மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தி, அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை அரசு நிர்வாகம் ஒன்றிணைந்து செயல்பட்டது.

இதேபோன்று மீன்பிடி படகுகளுக்கு பாதுகாப்பு, கொரோனா விதிகளை கடைப்பிடித்து பாதுகாப்புடனான நிவாரண முகாம்கள் அமைத்தது, மரங்களை அப்புறப்படுத்தியது, மின் இணைப்புகளை சீர் செய்தது ஆகியவற்றுக்கு நிர்வாகத்திற்கு உதவியாக செயல்பட்டதற்காகவும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

Next Story