மராட்டியத்தில் கியாஸ் சிலிண்டர் வெடிப்பு: ஒருவர் உயிரிழப்பு; 5 பேர் கவலைக்கிடம்


மராட்டியத்தில் கியாஸ் சிலிண்டர் வெடிப்பு:  ஒருவர் உயிரிழப்பு; 5 பேர் கவலைக்கிடம்
x
தினத்தந்தி 7 Dec 2020 12:39 AM IST (Updated: 7 Dec 2020 12:39 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தின் மும்பை நகரில் கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

மும்பை,

மராட்டியத்தின் மும்பை நகரில் லால்பாக் பகுதியில் கியாஸ் சிலிண்டர் ஒன்று திடீரென வெடித்தது.  இதனை தொடர்ந்து தீ விபத்தும் ஏற்பட்டது.  இதனால் அந்த பகுதியில் புகை பரவி மூச்சு திணறல் ஏற்பட்டது.

இந்த தீ விபத்து பற்றி அறிந்தவுடன் மும்பை தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  ஒரு மணிநேரத்தில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

எனினும், இந்த சம்பவத்தில் 20 பேர் காயமடைந்தனர்.  அவர்களில் சிலர் கிங் எட்வர்டு நினைவு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களை மும்பை மாநகர மேயர் கிஷோரி பட்னாகர் இன்று நேரில் சந்தித்து அவர்களின் உடல்நிலை பற்றி விசாரித்துள்ளார்.  இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒருவர் இன்றிரவு உயிரிழந்து உள்ளார்.  5 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.  அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story