காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு ; சாலைகள் மூடல்


கோப்பு படம்(பிடிஐ)
x
கோப்பு படம்(பிடிஐ)
தினத்தந்தி 12 Dec 2020 6:46 PM GMT (Updated: 12 Dec 2020 6:46 PM GMT)

காஷ்மீரில் நேற்று முன்தினம் இரவு முதல் பனிப்பொழிவு தொடங்கி இருக்கிறது.

ஸ்ரீநகர், 

காஷ்மீரில் நேற்று முன்தினம் இரவு முதல் பனிப்பொழிவு தொடங்கி இருக்கிறது. இதனால் காஷ்மீர் முழுவதும் பனிப்போர்வை போர்த்தியது போல எங்கு நோக்கினும் வெள்ளை வெளேர் என காட்சியளிக்கிறது. காஷ்மீரின் மலைப்பாங்கான பகுதிகளில் சுமார் 2 அடி வரை பனி படர்ந்துள்ளது.

கோடைகால தலைநகரான ஸ்ரீநகரில் நேற்று காலையிலேயே 2 முதல் 3 அங்குலம் அளவுக்கு பனி படர்ந்திருந்தது. இங்கு வெப்பநிலையும் மைனஸ் 0.6 டிகிரி செல்சியசுக்கு சென்றது. இது முந்தைய தினம் 2.3 டிகிரி செல்சியசாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பனிப்பொழிவால் காஷ்மீர் பள்ளத்தாக்கை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் பல சாலைகள் மூடப்பட்டு உள்ளன. பனியால் மூடப்பட்டுள்ள சாலைகளில் பனியை அகற்றி போக்குவரத்தை சீரமைக்க நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

பனிப்பொழிவுடன் மழையும் பெய்ததால் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டு உள்ளது. நேற்று அதிகாலையில் கடும் பனிப்பொழிவு நிலவியதால் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் காலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைப்போல லடாக் யூனியன் பிரதேசத்திலும் கார்கில், டிராஸ், மீன்மார்க், சோஜிலா உள்ளிட்ட இடங்கள் அனைத்தும் வெண்பனியில் மூழ்கியுள்ளன. இந்த பனிப்பொழிவால் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.


Next Story