சபரிமலையில் மகர விளக்கு பூஜை நாளில் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி


சபரிமலையில் மகர விளக்கு பூஜை நாளில் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி
x
தினத்தந்தி 3 Jan 2021 10:31 PM GMT (Updated: 3 Jan 2021 10:31 PM GMT)

சபரிமலையில் மகர விளக்கு பூஜை நாளில் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தேவஸ்தான தலைவர் வாசு தெரிவித்து உள்ளார்.

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 30–ந்தேதி நடை திறக்கப்பட்டது. 31–ந்தேதி முதல் பூஜை நடைபெற்று வருகிறது. தற்போது கோவிலில் 5 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் சாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். சிகர நிகழ்ச்சியான மகர விளக்கு பூஜை வருகிற 14–ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் இருந்து வந்தது.

இந்தநிலையில் நேற்று சன்னிதானத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் என்.வாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

மகர விளக்கு தினமான வருகிற 14–ந் தேதி ஆன்லைனில் தரிசனத்திற்கான முன்பதிவு செய்த 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். முன் பதிவு செய்யாத அய்யப்ப பக்தர்களுக்கு கண்டிப்பாக தரிசனத்திற்கு அனுமதி கிடையாது.

தரிசனத்திற்கு 48 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் உள்பட கொரோனா நெகட்டிவ் மருத்துவ சான்றிதழ்களை பக்தர்கள் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.


Next Story