வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுடன் ஜனவரி 21ஆம் தேதி முதல் கட்ட சந்திப்பு - சுப்ரீம் கோர்ட் அமைத்த குழு தகவல்


படம்:  ANI
x
படம்: ANI
தினத்தந்தி 19 Jan 2021 11:06 AM GMT (Updated: 19 Jan 2021 11:06 AM GMT)

வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுடன் ஜனவரி 21ஆம் தேதி முதல் கட்ட சந்திப்பு நடத்தவுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட குழுவைச் சேர்ந்த அனில் கன்வட் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி

வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் விவசாயிகளின் போராட்டங்கள் தொடா்பாகவும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்து வரும் சுப்ரீம் கோர்ட்  வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும்  விவசாயிகள் எழுப்பி வரும் பிரச்சினைகளுக்குத் தீா்வு காண்பதற்காக 4 பேர் கொண்ட குழுவை நியமித்து உத்தரவிட்டது.

அந்தக் குழுவின் முதல் கூட்டம் இன்று  நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு குழுவைச் சேர்ந்த அனில் கன்வட் கூறியதாவது:-

விவசாயிகளுடனான முதல் சந்திப்பு ஜனவரி 21 ஆம் தேதி நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எங்களை நேரில் சந்திக்க விரும்பும் அமைப்புகளுடன் நேரில் சந்திப்பு நடத்தப்படும். நேரில் வர முடியாத அமைப்புகளுடன் காணொலி மூலம் சந்திப்பு நடைபெறும்.

அரசு எங்களுடன் பேச விரும்பினால், நாங்கள் அவர்களையும் வரவேற்கிறோம். அரசாங்க தரப்பின் கருத்தையும் கேட்பதற்கு தயாராக உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே விவசாயிகளுடன் நாளை மத்திய அரசு 10ஆம் கட்டப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

சுப்ரீம் கோர்ட் அமைத்த குழுவில் பாரதிய கிஸான் யூனியனின் தேசியத் தலைவா் பூபேந்தா் சிங் மன், சா்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி மையத்துக்கான தெற்காசிய இயக்குநா் பிரமோத் குமாா் ஜோஷி, வேளாண் விளைபொருள்களுக்கான விலை நிா்ணய ஆணையத்தின் முன்னாள் தலைவா் அசோக் குலாடி, ஷேத்கரி சங்காதனா  என்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவா் அனில் கன்வட் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். இந்த குழுவிலிருந்து பூபேந்தா் சிங் கடந்த வாரம் விலகியதையடுத்து தற்போது குழுவில் 3 பேர் மட்டுமே உள்ளனர்.

Next Story