வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்கும் மத்திய அரசின் யோசனை நிராகரிப்பு: “போராட்டம் நீடிக்கும்” என்று விவசாய அமைப்புகள் அறிவிப்பு


வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்கும் மத்திய அரசின் யோசனை நிராகரிப்பு: “போராட்டம் நீடிக்கும்”  என்று விவசாய அமைப்புகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Jan 2021 11:30 PM GMT (Updated: 21 Jan 2021 8:59 PM GMT)

வேளாண் சட்டங்களை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கும் மத்திய அரசின் திட்டத்தை விவசாய அமைப்புகள் நிராகரித்தன. சட்டங்களை ரத்து செய்யும்வரை போராட்டம் நீடிக்கும் என்று அறிவித்துள்ளன.

புதுடெல்லி, 

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு பல சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

நேற்றுமுன்தினம் 10-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. அதில், வேளாண் சட்டங்களை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும், சுமுக தீர்வு காண ஒரு கூட்டுக்குழுவை அமைப்பதாகவும் ஒரு திட்டத்தை மத்திய அரசு முன்வைத்தது.

மத்திய அரசின் திட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக, டெல்லி சிங்கு எல்லையில், விவசாய அமைப்புகளின் கூட்டு அமைப்பான ‘சம்யுக்த் கிசான் மோர்ச்சா’வின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய கூட்டம், தொடர்ச்சியாக இரவுவரை நடந்தது. கூட்டத்தில், மத்திய அரசின் யோசனை குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

இறுதியில், அந்த யோசனையை நிராகரிப்பது என்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து சம்யுக்த் கிசான் மோர்ச்சா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மத்திய அரசு முன்வைத்த யோசனை, எங்கள் பொதுக்குழு கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் இதுவரை உயிர்நீத்த 143 விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். அவர்களின் தியாகம் வீண் போகாது.

வேளாண் சட்டங்களை ரத்து செய்யும்வரை எங்கள் போராட்டம் தொடரும். அந்த சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய மசோதா கொண்டுவர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசுடன் இன்று (வெள்ளிக்கிழமை) 11-வது சுற்று பேச்சுவார்த்தை நடக்கும்நிலையில், விவசாய அமைப்புகள் இந்த முடிவை எடுத்துள்ளன.

Next Story