ஜெய் ஸ்ரீராம் என்பது அரசியல் வார்த்தை அல்ல: சிவசேனா


ஜெய் ஸ்ரீராம் என்பது அரசியல் வார்த்தை அல்ல: சிவசேனா
x
தினத்தந்தி 25 Jan 2021 8:44 PM GMT (Updated: 25 Jan 2021 8:44 PM GMT)

இந்த நாட்டில் ஜெய் ஸ்ரீராம் எனக் கூறுவதை யாரும் வேதனையாக நினைக்கக்கூடாது என்று சிவசேனா தெரிவித்துள்ளது.

மும்பை, 

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த சில நாட்களுக்கு முன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் விழா நடந்தது. இந்த விழாவில் பிரதமர் மோடி மற்றும் அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்த விழாவின் போது கூட்டத்தில் இருந்த சிலர் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பினர். இதனால், அதிருப்தி அடைந்த மம்தா பானர்ஜி அந்த விழாவில்  உரையாற்ற வில்லை. இதையடுத்து பாரதீய ஜனதா கட்சி ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பும் போது சிலர் வேதனை அடைவதாக மம்தா பானர்ஜியை சாடியிருந்தது. 

இந்த நிலையில், பாரதீய ஜனதாவின் இந்த குற்றச்சாட்டு குறித்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் எம்.பியுமான சஞ்சய் ராவத் கருத்து கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

இந்த நாட்டில் ஜெய் ஸ்ரீராம் எனக் கூறுவதை யாரும் வேதனையாக நினைக்கக்கூடாது. ஜெய் ஸ்ரீ ராம் எனக் கூறுவதால் யாருடைய மதச்சார்பின்மைக்கும் ஆபத்து ஏற்படப்போவதில்லை. நாட்டின் பெருமிதமாகவும் ஆதரவாகவும் ராமரை நாம் நினைக்க வேண்டும்.ஜெய் ஸ்ரீராம் என்பது அரசியல் வார்த்தை அல்ல. அது நம்பிக்கை சம்பந்தப்பட்டது. கடவுள் ராமர் மீது மம்தா பானர்ஜிக்கு நம்பிக்கை இருக்கும் என நம்புகிறேன்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவிலும் இவ்விவகாரம் பற்றி  எழுதப்பட்டு இருந்தது. இதில், ஜெய்ஸ்ரீராம் என நிகழ்ச்சியில்  யாரும் கோஷம் எழுப்புவதால் மம்தா பானர்ஜி அதிருப்தி அடைய வேண்டியது இல்லை” என தெரிவிக்கப்பட்டு இருந்தது. 


Next Story