பாகிஸ்தானிடம் இருந்து ஆயுதங்கள், போதை பொருள் சப்ளை: பயங்கரவாத அமைப்பின் தளபதி திடுக் தகவல்


பாகிஸ்தானிடம் இருந்து ஆயுதங்கள், போதை பொருள் சப்ளை:  பயங்கரவாத அமைப்பின் தளபதி திடுக் தகவல்
x
தினத்தந்தி 7 Feb 2021 1:53 PM GMT (Updated: 7 Feb 2021 1:53 PM GMT)

பாகிஸ்தானிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் போதை பொருட்கள் சப்ளை செய்யப்படுகின்றன என கைது செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் தளபதி அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளார்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீர் டி.ஜி.பி. தில்பாக் சிங் செய்தியாளர்களுக்கு இன்று அளித்துள்ள பேட்டியில், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் கிளை அமைப்பில் ஒன்றான லஷ்கர் இ முஸ்தபா அமைப்பின் தளபதி ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

ஜம்முவில் பயங்கரவாதம் பரவுவதற்காக பல்வேறு பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டு உள்ளன என அவர் விசாரணையில் தெரிவித்து உள்ளார்.  அவர்கள் பாகிஸ்தானிடம் இருந்து ஆயுதங்களை பெற்று காஷ்மீர் மற்றும் பிற பகுதிகளுக்கு அவற்றை அனுப்பி வைக்கின்றனர்.

எல்லை பகுதி என்பதனால், போதை பொருள் கடத்தலுக்கு ஏற்ற எளிய இலக்குகளாக பஞ்சாப், ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகியவை உள்ளன.  போதை பொருள் கும்பலுக்கு பாகிஸ்தானிடம் இருந்து ஆதரவும், நிதி உதவியும் வருகின்றன.

ஜம்முவின் ஆர்னியா பிரிவில் 66 கிலோ போதை பொருட்களை எல்லை பாதுகாப்பு படையினர் (பி.எஸ்.எப்.) கைப்பற்றி உள்ளனர்.  காஷ்மீரில், குப்வாரா, பூஞ்ச், பாராமுல்லா, சம்பா ஆகியவை போதை பொருள் கடத்தலுக்கான செயல் மண்டலங்களாக உள்ளன என்று அவர் தெரிவித்து உள்ளார்.

இந்தியாவால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களில் ஒன்றான ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் புல்வாமா தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேரை பலி கொண்டது.  இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் இருந்த அந்த இயக்கத்தின் முகாம்கள் மீது இந்திய விமான படை தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகள் பலரை அழித்தது.  இந்த இயக்கத்தின் கிளை அமைப்பில் ஒன்றாக லஷ்கர் இ முஸ்தபா என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வந்துள்ளது.

இந்த அமைப்பின் தலைவராக இதயத்துல்லா மாலிக் என்பவர் செயல்பட்டு வந்துள்ளார்.  அவரை ஜம்மு மற்றும் அனந்த்நாக் போலீசார் கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு நேற்று கைது செய்தனர்.  அவருடைய கூட்டாளிகள் 4 பேர் முன்பே கைது செய்யப்பட்டு இருந்தனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் தலைநகராக உள்ள ஜம்மு நகர் மீது மிக பெரிய தாக்குதல் நடத்த இதயத்துல்லா மாலிக் திட்டமிட்டு இருந்துள்ளார்.  இந்த அதிர்ச்சி தகவலை போலீசாரால் கைது செய்யப்பட்ட அவரது கூட்டாளிகள் 4 பேர் போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர்.

கடந்த 2020ம் ஆண்டு மே மாதத்தில் புல்வாமா நகரில் சக்தி வாய்ந்த கார் வெடிகுண்டு ஒன்று கண்டறியப்பட்டது.  இந்த வழக்குடன் தொடர்புடைய 10 குற்றவாளிகளில் இதயத்துல்லா மாலிக்கும் ஒருவர்.  அந்த வெடிகுண்டு பின்னர் அழிக்கப்பட்டு விட்டது.  இதனால் பெரிய தாக்குதல் தவிர்க்கப்பட்டது என ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீசார் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், பாகிஸ்தானிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் போதை பொருட்கள் ஆகியவை நாட்டிற்குள் சப்ளை செய்யப்படுகின்றன என பயங்கரவாத அமைப்பின் தளபதி இதயத்துல்லா மாலிக் போலீசாரின் விசாரணையில் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளார்.

Next Story