குலாம் நபி ஆசாத் பா.ஜனதாவில் எப்போது சேருவார் ...? அவரே அளித்த பதில்


படம்:  PTI
x
படம்: PTI
தினத்தந்தி 12 Feb 2021 5:24 PM GMT (Updated: 12 Feb 2021 5:24 PM GMT)

வதந்தி பரப்புபவர்களுக்கு என்னைப் பற்றி தெரியாது. காஷ்மீரில் கருப்பு பனி பெய்யும் நாள் தான், பா.ஜ.க.,விலோ அல்லது வேறு கட்சியிலோ நான் சேரும் நாள் என குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.

புதுடெல்லி

காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத்தின் பதவிக் காலம் வரும் 15 ந்தேதியுடன்  முடிவடைகிறது. அவருக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்படுவது குறித்து எந்த ஆலோசனையும் நடக்கவில்லை என்றும் கடசி தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நாற்பது ஆண்டுகளாக அவர் பாராளுமன்றவாதியாக இருந்தவர். திங்களன்று குலாம்நபி ஆசாத் உட்பட பதவிக்காலம் முடியும் எம்.பி.,க்களுக்கு பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய பிரதமர் மோடி குலாம் நபி ஆசாத்தை புகழ்ந்தார். உங்களை நான் ஓய்வுபெற விடமாட்டேன். தொடர்ந்து ஆலோசனைகள் கேட்பேன். உங்களுக்காக என்னுடைய வீட்டின் கதவுகள் எப்போதும் திறந் திருக்கும். என உருக்கமாக கூறி கண்ணீர் சிந்தினார்.

அந்நிகழ்ச்சியில் பேசிய ஆசாத், நான் ஒரு இந்திய முஸ்லிம் என்பதில் பெருமை கொள்கிறேன் என்றார். மேலும், பா.ஜ.க.,வுடன் பேசக்கூடாது, வாஜ்பாயிடம் வேண்டுமானால் பேசலாம் என இந்திரா கூறியதாக சுட்டிக்காட்டினார். எதிர்க்கட்சித் தலைவராக எப்படி செயல்படவேண்டும் என்பதை வாஜ்பாயிடமிருந்து கற்றுக்கொண்டதாக கூறினார். 

சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் லைமையின் செயல்பாடுகளை விமர்சித்து கடிதம் எழுதிய 23 தலைவர்களில் ஆசாத்தும் ஒருவர். இது போன்ற சூழலால் விரைவில் அவர் பா.ஜ.க.,வில் இணைவார் என்ற பேச்சு எழுந்தது.

இது ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த  குலாம் நபி ஆசாத் கூறியதாவது:- 

மோடிக்கும் எனக்கும் 90-களில் இருந்து பழக்கம். இருவரும் பொதுச் செயலாளர்களாக இருந்த போது, டி.வி., விவாதத்தில் பங்கேற்போம். சண்டையிட்டுக்கொள்வோம். இருவரும் முதல்வர்களாக இருந்த போதும் பழக்கம் ஏற்பட்டது. பிரதமருடனான கூட்டங்களில் சந்தித்திருக்கிறோம். பின்னர் நான் சுகாதார அமைச்சராக இருந்தேன். அவர் முதல்வராக தொடர்ந்தார். அப்போது 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை பல்வேறு விஷயங்கள் பற்றி பேசுவோம்.

பிரியாவிடையின் போது ஒருவரை ஒருவர் அறிந்திருந்ததால் அழவில்லை. 2006-ல் காஷ்மீரில் குஜராத் சுற்றுலா பேருந்து தாக்கப்பட்டது. அது பற்றி அப்போது மோடியிடம் பேசும் போது நிலைகுலைந்து போனேன். அந்த கதையை குறிப்பிடும் போது தான் மோடி உடைந்து அழுதார். அந்த சம்பவம் நினைவுக்கு வந்ததால் என்னாலும் அந்த கதையை முழுமையாக முடிக்க முடியவில்லை. பா.ஜனதாவில் நான் சேரப்போவதாக வதந்தி பரப்புபவர்களுக்கு என்னைப் பற்றி தெரியாது. காஷ்மீரில் கருப்பு பனி பெய்யும் நாள் தான், பா.ஜ.க.,விலோ அல்லது வேறு கட்சியிலோ நான் சேரும் நாள். என கூறியுள்ளார்.


Next Story