மத்திய பிரதேசத்தில் செல்போன் சிக்னலுக்காக ராட்டினத்தில் ஏறி பேசிய மந்திரி + "||" + Minister who got on the wheel for a cell phone signal in Madhya Pradesh
மத்திய பிரதேசத்தில் செல்போன் சிக்னலுக்காக ராட்டினத்தில் ஏறி பேசிய மந்திரி
மத்திய பிரதேசத்தில் பொது சுகாதாரத்துறை மந்திரி பிரஜேந்திர சிங் யாதவ் செல்போன் சிக்னல் கிடைக்காததால் ராட்டினத்தில் ஏறி பேசினார்.
போபால்,
மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பொது சுகாதாரத்துறை மந்திரியாக இருப்பவர் பிரஜேந்திர சிங் யாதவ். அசோக்நகர் மாவட்டம் அம்கோ கிராமத்தில் ஒரு பொருட்காட்சி நடந்து வருகிறது. அதில், ‘பாகவத கதா’ பாராயண நிகழ்ச்சி நடந்து வருகிறது. அந்த நிகழ்ச்சியை மந்திரி பிரஜேந்திர சிங் யாதவ் நடத்தி வருகிறார். அதற்காக அந்த கிராமத்திலேயே 9 நாட்களாக தங்கி இருக்கிறார்.
இதற்கிடையே, அந்த பொருட்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள 50 அடி உயர ராட்டினத்தின் உச்சியில் அமர்ந்து பிரஜேந்திர சிங் யாதவ் செல்போனில் பேசும் காட்சி பத்திரிகைகளில் வெளியானது. அந்த வீடியோ, சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி ‘வைரல்’ ஆனது.
விஷயம் இதுதான். செல்போன் சிக்னலுக்காக அவர் அந்த ராட்டினத்தில் ஏறியுள்ளார். இதை அறிந்த நெட்டிசன்கள், ‘இதுதான் டிஜிட்டல் இந்தியா லட்சணமா?’ என்று கேலி செய்துள்ளனர். மீம்ஸ்களும் உலா வந்தன.
இதுகுறித்து பிரஜேந்திர சிங் யாதவ் கூறுகையில், ‘‘அந்த கிராமத்தில் 9 நாட்களாக தங்கி இருப்பதால், அங்குள்ள பிரச்சினைகள் குறித்து கிராம மக்கள் என்னிடம் முறையிட்டனர். அதிகாரிகளிடம் பேசி இதற்கான உத்தரவை பிறப்பிக்க நினைத்தேன். ஆனால், மலைகளால் சூழப்பட்ட அந்த கிராமத்தில் செல்போன் சிக்னலே கிடைக்கவில்லை. எனவே, ராட்டினத்தில் ஏறி பேசினேன்’’ என்றாா்.