சட்டவிரோத கல்குவாரிகளால் ஏற்படும் உயிர் பலியை தடுக்க தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை: கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி


சட்டவிரோத கல்குவாரிகளால் ஏற்படும் உயிர் பலியை தடுக்க தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை: கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி
x
தினத்தந்தி 23 Feb 2021 8:04 PM GMT (Updated: 23 Feb 2021 8:04 PM GMT)

சட்டவிரோத கல்குவாரிகளால் ஏற்படும் உயிர் பலியை தடுக்க தவறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வலியுறுத்தி உள்ளார்.

ராமநகரில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

ரூ.6 ஆயிரம் கோடியை...
நான் முதல்-மந்திரியாக இருந்த போது காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் காவிரி ஆற்றுப்பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் ஏரிகளை நிரப்பும் திட்டத்திற்காக ரூ.6 ஆயிரம் கோடியை ஒதுக்கி இருந்தேன். விவசாயிகளின் நலன் கருதி அந்த நிதியை ஒதுக்கி இருந்தேன். தற்போது பா.ஜனதா ஆட்சியில் ஏரிகளில் தண்ணீர் நிரப்பும் திட்டத்திற்காக நான் ஒதுக்கிய ரூ.6 ஆயிரம் கோடி திரும்ப பெறப்பட்டுள்ளது. அந்த நிதியை மற்ற பல திட்டங்களுக்கு பா.ஜனதா அரசு பயன்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் காவிரி ஆற்று உபரி நீரை பயன்படுத்தி, மத்திய அரசிடம் ரூ.6 ஆயிரம் கோடியை பெற்று, நதிகள் இணைக்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கி உள்ளது. மத்திய அரசின் நிதி மூலமாக தமிழ்நாட்டில் காவிரி ஆற்றின் உபரி நீரை பயன்படுத்தி ஏரிகளை நிரப்பும் பணி நடக்கிறது. கர்நாடகத்தில் ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை அரசு மற்ற திட்டங்களுக்கு பயன்படுத்துகிறது. சாதாரண மக்களின் துயரங்களை துடைக்க பா.ஜனதா அரசுக்கு அக்கறை இல்லை.

கடுமையான நடவடிக்கை
மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தாமல், அரசு சார்பில் ஒதுக்கப்படும் நிதி அனைத்தும் ஊழல் செய்யப்படுகிறது. சிக்பள்ளாப்பூரில் நடந்த வெடி விபத்து சம்பவத்தில் 6 பேர் தங்களது உயிரை பறி கொடுத்துள்ளனர். கடந்த மாதம் தான் சிவமொக்கா மாவட்டத்தில் நடந்த வெடி விபத்தில் 6 பேர் பலியாகி இருந்தார்கள். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதற்கு சட்டவிரோதமாக கல்குவாரி நடத்துபவர்கள், வெடிப்பொருட்களை பதுக்கி வைத்திருப்பவர்களே காரணம்.

தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கும் பட்சத்தில் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது தடுக்கப்படும். சட்டவிரோத கல்குவாரிகளால் ஏற்படும் உயிர் இழப்புகளையும் தடுக்க முடியும். இனியும் அரசு காலதாமதம் செய்யாமல் மாநிலத்தில் சட்டவிரோதமாக கல்குவாரிகள் நடத்துபவர்கள் மீதும், இந்த சம்பவங்கள் நடைபெறுவதற்கு காரணமாக இருந்தவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமானதாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story