அமேசோனியா 1 செயற்கைக்கோள் ஏவும் பணி வெற்றி: பிரேசில் அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து


அமேசோனியா 1 செயற்கைக்கோள் ஏவும் பணி வெற்றி:  பிரேசில் அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
x
தினத்தந்தி 28 Feb 2021 10:07 AM GMT (Updated: 28 Feb 2021 10:07 AM GMT)

அமேசோனியா 1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவும் பணி வெற்றியடைந்த நிலையில் பிரேசில் அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று காலை 10.24 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட், 19 செயற்கை கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த செயற்கை கோள்களில் பிரேசில் நாட்டின் அமேசோனியா 1 என்ற செயற்கைக்கோள் முதன்மையாகவும், அதுதவிர 18 செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட்டுள்ளன.

பிரேசிலின் அமேசோனியா 1 என்ற செயற்கைக்கோளானது, அமேசான் காடுகள் அழிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் அவற்றை கண்காணிக்கவும், பிரேசில் நாடு முழுவதும் விவசாயம் சார்ந்த புவிசார் ஆய்வுக்காகவும் ஏவப்பட்டுள்ளது.

இந்த முதன்மை செயற்கைக்கோளானது, ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமுடன் பிரிந்து உள்ளது என இஸ்ரோ அறிவித்து உள்ளது.  இதேபோன்று ராக்கெட்டில் இருந்து மற்ற 18 செயற்கைக்கோள்களும் பிரிந்து உள்ளன என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ராக்கெட் ஏவப்பட்ட நிகழ்வு வெற்றியடைந்த நிலையில், இது ஒரு வரலாற்று தருணம் என்று குறிப்பிட்டு பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனரோவுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

இதுபற்றி தனது டுவிட்டரில் பிரதமர் மோடி வெளியிட்ட செய்தியில், பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்டால் பிரேசிலின் அமேசோனியா 1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டு வெற்றியடைந்ததற்காக பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனரோவுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

நம்முடைய விண்வெளி ஒத்துழைப்பில் இது ஒரு வரலாற்று தருணம்.  பிரேசில் நாட்டு விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துகள் என தெரிவித்து கொண்டார்.  ராக்கெட் ஏவும்பொழுது, சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் பிரேசில் நாட்டு குழுவினரும் இருந்தனர்.

Next Story