ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு அணி கோப்பையை வெல்ல வேண்டி நூதன பிரார்த்தனை
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வெல்ல வேண்டி, ரசிகர்கள் நூதன பிரார்த்தனை செய்தனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்
இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு ஐ.பி.எல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் தொடங்கப்பட்டது. இதுவரை 13 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்கள் முடிந்து உள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு முறையும், டெக்கான் சார்ஜர்ஸ் அணி ஒரு முறையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 முறையும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஒரு முறையும் கோப்பையை உச்சிமுகர்ந்து உள்ளன. ஆனால் இதுவரை கிங்ஸ் லெவன்ஸ் பஞ்சாப், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் கோப்பையை கைப்பற்றியது இல்லை.
சமீபத்தில் முடிந்த ஏலம்
குறிப்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக உள்ள விராட் கோலி, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார். டிவில்லியர்ஸ் உள்பட நட்சத்திர வீரர்கள் அங்கம் வகித்தாலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ஐ.பி.எல். கோப்பை என்பது எட்டாத கனியாகவே இருந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் புதுப்பொலிவுடன் வருவதும், பின்னர் ஏதாவது ஒரு கட்டத்தில் சொதப்பி தோல்வியை சந்தித்து வெளியே செல்வதும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நிலையாக உள்ளது. பெங்களூரு அணி ரசிகர்களும் ஆண்டுதோறும் ‘‘இ-சாலா கப் நம்தே’’ என்று தான்
கூறி வருகிறார்கள். ஆனால் கோப்பையை வெல்ல முடியாத போது அந்த அணியின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில் 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் வருகிற ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடக்க உள்ளது. இதற்கான வீரர்களை தேர்வு செய்யும் ஏலமும் சமீபத்தில் முடிந்து உள்ளது. இந்த ஆண்டாவது ஐ.பி.எல். கோப்பையை பெங்களூரு அணி வெல்ல வேண்டும் என்று அந்த அணியின் ரசிகர்கள் கோவில்களில் வேண்டி வருகின்றனர். இதுபோல பெங்களூரு அணி கோப்பையை வெல்ல வேண்டி ரசிகர்கள் நூதன வேண்டுதல் நடத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
தேர் மீது வாழைப்பழம்
சித்ரதுர்கா டவுனில் தெருமல்லேசுவரா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெறும். அப்போது தேர் மீது நாம் நினைக்கும் காரியத்தை வாழைப்பழத்தில் எழுதி வீசினால் அது நடைபெறும் என்பது ஐதீகம்.இந்த நிலையில் நேற்று தெருமல்லேசுவரா கோவிலில் ஆண்டு திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட பெங்களூரு அணி ரசிகர்கள், இந்த முறை ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்று வாழைப்பழத்தில் எழுதி தேர் மீது வீசி நூதன வேண்டுதலில் ஈடுபட்டனர்.
கடந்த ஆண்டு (2020) இதேபோன்று நடந்த திருவிழாவில் தேர் மீது வாழைப்பழத்தை எழுதி ரசிகர்கள் வீசி இருந்தனர். கடந்த ஆண்டு பெங்களூரு அணி அரை இறுதி வரை முன்னேறி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story