கூலிப்படையை ஏவி வியாபாரியை கொன்ற வழக்கில் மனைவி, மகன் உள்பட 5 பேர் கைது; நடத்தையில் சந்தேகப்பட்டதால் மாரடைப்பில் இறந்ததாக நாடகமாடியது அம்பலம்
பெங்களூருவில் கூலிப்படையை ஏவி வியாபாரியை கொலை செய்த வழக்கில் மனைவி, மகன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடத்தையில் சந்தேகப்பட்டதால் மாரடைப்பில் இறந்ததாக நாடகமாடியதும் அம்பலமாகி உள்ளது.
பெங்களூரு: பெங்களூருவில் கூலிப்படையை ஏவி வியாபாரியை கொலை செய்த வழக்கில் மனைவி, மகன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடத்தையில் சந்தேகப்பட்டதால் மாரடைப்பில் இறந்ததாக நாடகமாடியதும் அம்பலமாகி உள்ளது.
வியாபாரி மாரடைப்பால்...
பெங்களூரு ராஜகோபால்நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஹெக்கனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் முகமது கஞ்ஜலி(வயது 52), வியாபாரி. இவரது மனைவி சர்வரி பேகம்(43). இந்த தம்பதியின் மகன் ஷபி உர் ரகுமான்(22).
இந்த நிலையில், கடந்த மாதம் (பிப்ரவரி) 9-ந் தேதி முகமது கஞ்ஜலி மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் சர்வரி பேகமும், அவரது மகன் ஷபி உர் ரகுமானும் கூறினார்கள்.
பின்னர் முகமது கஞ்ஜலியின் உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு அடக்கம் செய்திருந்தார்கள். இதற்கிடையில், கடந்த மாதம் 27-ந் தேதி முகமது கஞ்ஜலியின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவர் மாரடைப்பால் சாகவில்லை என்றும், அவரை கொலை செய்திருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறி, அவரது நெருங்கிய உறவினர் ஒருவர், ராஜகோபால்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
மனைவி, மகன் கைது
முதலில் சந்தேகத்தின் பேரில் சர்வரி பேகத்தை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்னார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனது கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்தது சர்வரி பேகம் ஒப்புக் கொண்டார். முகமது கஞ்ஜலி கொலையில் அவரது மகன் ஷபி உர் ரகுமானுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து, சர்வரி பேகம், அவரது மகன் ஷபி உர் ரகுமான், கூலிப்படையை சேர்ந்த தனிச்சந்திராவை சேர்ந்த அஸ்தாப்(21), சையத் சுவேஜ் பாஷா(23), முகமது சைப்(20) ஆகிய 5 பேரையும் ராஜகோபால் நகர் போலீசார் கைது செய்தார்கள். கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியே வந்தது.
நடத்தையில் சந்தேகத்தால் கொலை
அதாவது முகமது கஞ்ஜலி தனது மனைவி சர்வரி பேகத்தின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சர்வரி பேகம் தனது மகனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
கூலிப்படையை சேர்ந்த 3 பேருக்கும் ரூ.4½ லட்சம் தருவதாக சர்வரி பேகம் தெரிவித்துள்ளார். இதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 9-ந் தேதி முகமது கஞ்ஜலிக்கு உணவில் 6 தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து சர்வரி பேகம் சாப்பிட வைத்துள்ளார்.
மறுநாள் அதிகாலையில் வீட்டுக்கு வந்த கூலிப்படையினர் தலையணையால் முகமது கஞ்ஜலியின் முகத்தை அமுக்கி, மூச்சை திணறடித்து கொலை செய்தது தெரியவந்தது. ஆனால் அவர் மாரடைப்பால் உயிர் இழந்து விட்டதாக சர்வரி பேகம், அவரது மகன் ஆகியோர் நாடகமாடியது தெரியவந்துள்ளது.
கைதான 5 பேர் மீதும் ராஜகோபால்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு பின்பு 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story