கர்நாடகத்தில் 3 நாட்களாக தொடரும் காட்டுத்தீ; 5 ஆயிரம் எக்டேர் வனப்பகுதி எரிந்து நாசம்
கதக் அருகே 3 நாட்களாக தொடர்ந்து காட்டுத்தீ எரிந்து வருகிறது. இந்த தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் வனத்துறையினர் திணறி வருகிறார்கள்.
காட்டுத்தீ
கர்நாடகத்தில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக கடும் குளிர் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடை காலம் தொடங்கியதை தொடர்ந்து வனப்பகுதியில் உள்ள புல்வெளிகள், செடி, கொடிகள் காய்ந்து வருகின்றன. இதனால் காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க முன்எச்சரிக்கையாக கர்நாடகத்தில் உள்ள அனைத்து வனப்பகுதிகளிலும் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியும், வனப்பகுதி எல்லையோர கிராம மக்களிடம் வனப்பகுதிக்குள் தீப்பிடிக்கும் பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
இருப்பினும் சமீபத்தில் துமகூரு மாவட்டம் மதுகிரி வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த நிலையில் கதக் மாவட்டம் முண்டரகி தாலுகா கப்பட்டகுட்டா மலைப்பகுதியில் கடந்த 2-ந்தேதி காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ கொழுந்தவிட்டு எரிந்து வருகிறது. காட்டுத்தீ பற்றி தகவல் அறிந்ததும் ஏராளமான வனத்துறையினரும், தீயணைப்பு படையினரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
5 ஆயிரம் எக்டேர் வனப்பகுதி நாசம்இருப்பினும் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதாலும், புல், செடி, கொடிகள் காய்ந்து இருப்பதாலும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இதனால் 3-வது நாளாக நேற்றும் தீயணைப்பு பணி தொடர்ந்தது. ஆனாலும் வனப்பகுதியில் பிடித்த தீயை அணைக்க முடியவில்லை.
3 நாட்களாக தொடர்ந்து எரிந்துவரும் காட்டுத்தீயில் சுமார் 5 ஆயிரம் எக்டேர் வனப்பகுதியில் மூலிகை செடிகள், மரங்கள் எரிந்து நாசமாகி உள்ளது. இதில் ஏராளமான ஊர்வனம், பறவைகள் எரிந்து செத்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் வனவிலங்குகள், பறவைகள் இடம்பெயர்ந்து சென்றுவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
10 இடங்களில்...இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், கப்பட்டகுட்டா வனப்பகுதியில் 10 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் தீப்பிடித்து எரிந்து வருகிறது. இதனால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தீத்தடுப்பு கோடுகள் அமைத்து தீத்தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். மர்மநபர்கள் தான் தீவைத்திருக்க வாய்ப்பு உள்ளது. இரவு-பகலாக தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. வனப்பகுதியில் தீவைத்தத நபர்கள் பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.