100 நாட்கள் அல்ல, 100 மாதங்கள் ஆனாலும் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை காங்கிரஸ் போராடும் - பிரியங்கா காந்தி


100 நாட்கள் அல்ல, 100 மாதங்கள் ஆனாலும் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை காங்கிரஸ் போராடும் - பிரியங்கா காந்தி
x
தினத்தந்தி 7 March 2021 6:53 PM IST (Updated: 7 March 2021 6:53 PM IST)
t-max-icont-min-icon

100 நாட்கள் அல்ல, 100 மாதங்கள் ஆனாலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து போராடும் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

மீரட், 

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர், டெல்லி எல்லைகளில் முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றுடன் இந்த போராட்டம் 102 வது நாளை எட்டியுள்ளது. 

திக்ரி, காஜிபூர், சிங்கு எல்லைகளில் விவசாயிகள் தங்களின் டிராக்டர்களையே வீடுகளாக மாற்றி தங்கி, சமைத்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்கின்றனர். இதில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த 3 சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்யாத வரையில் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று விவசாயிகள் திட்டவட்டமாக கூறி வருகின்றனர். இதனிடையே வேளாண் சட்டங்களுக்கு எதிராக மார்ச் 13-ம் தேதி மீண்டும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. 

இந்நிலையில் 100 நாட்கள் அல்ல, 100 மாதங்கள் ஆனாலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து போராடும் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக மீரட்டில் விவசாய சங்கக் கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, “வேளாண் சட்டங்களை திரும்ப பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்; விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் இருக்கும். போராட்டம் 100 நாட்களை கடந்தும் சாதகமான நிலை ஏற்படவில்லையே என்று நம்பிக்கை இழக்க வேண்டாம். 100 வாரங்கள் அல்லது 100 மாதங்கள் எடுத்தாலும், இந்த அரசாங்கம் அதன் கறுப்புச் சட்டங்களை திரும்பப் பெறும் வரை நாங்கள் உங்களுடன் இந்த போராட்டத்தை தொடருவோம்” என்று தெரிவித்தார்.

Next Story