கர்நாடகத்தில் தற்போதைக்கு ஊரடங்கு இல்லை: எடியூரப்பா திட்டவட்டம்


கர்நாடகத்தில் தற்போதைக்கு ஊரடங்கு இல்லை: எடியூரப்பா திட்டவட்டம்
x
தினத்தந்தி 29 March 2021 7:48 PM GMT (Updated: 29 March 2021 7:48 PM GMT)

கர்நாடகத்தில் எக்காரணத்தை கொண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதையடுத்து, கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் நேற்று மாலையில் மந்திரிகள், அரசு அதிகாரிகள், சுகாதாரத் துறை நிபுணர்களுடன் முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். அப்போது,  கொரோனா பரவல் காரணமாக மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

ஆனால் மாநிலத்தில் குறைந்த அளவே கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு வருவதால் ஊரடங்கோ, இரவு நேர ஊரடங்கோ அமல்படுத்த வேண்டாம் என்று அதிகாரிகள் மற்றும் நிபுணர்களிடம் முதல்-மந்திரி எடியூரப்பா திட்டவட்டமாக கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் இருக்க கூடாது. மக்கள் அலட்சியம் காட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும். 

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு விதிக்கப்படுவதாக தகவல்கள் பரவுகின்றன. கர்நாடகத்தில் எக்காரணத்தை கொண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படாது. இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்படாது” இவ்வாறு அவர் கூறினார்.

Next Story