மியான்மர் நாட்டவர்கள் இந்தியாவுக்குள் நுழைவதை தடுக்க மணிப்பூர் எல்லையில் தீவிர கண்காணிப்பு


மியான்மர் நாட்டவர்கள் இந்தியாவுக்குள் நுழைவதை தடுக்க மணிப்பூர் எல்லையில் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 30 March 2021 1:16 AM GMT (Updated: 30 March 2021 1:17 AM GMT)

மியான்மர் நாட்டவர்கள் இந்தியாவுக்குள் வருவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று மணிப்பூர் மாநில அரசு மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இம்பால், 

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான மியான்மரில் ஆட்சி கவிழ்ப்பு நடைபெற்று, ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் மீண்டும் தேர்தல் நடத்தி ஆட்சி ஒப்படைக்கப்படும் என மியான்மர் ராணுவம் கூறி வருகிறது. 

மியான்மர் ராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையால் வெகுண்டெழுந்த அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டங்களில் ஈடுபடுவர்களுக்கு எதிராக மியான்மர் ராணுவம் கடுமையான அடக்குமுறையை கடைபிடித்து வருகிறது. 

இத்தகைய அரசியல் குழப்பத்துக்கு மத்தியில், மியான்மர் மக்கள் சிலர் மணிப்பூர் எல்லை வழியாக இந்தியாவுக்குள் அடைக்கலம் நாடி  வருவதாக தகவல் வெளியானது. இதையடுத்து, மியான்மர் மக்கள் இந்தியாவுக்குள் வருவதை தடுக்க மணிப்பூர்  மாநில அரசு எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. 

இந்தியாவுக்குள் வரும் மியான்மர் மக்களுக்கு  முகாம் அமைத்து உணவு உள்ளிட்டவை வழங்கக்கூடாது எனவும் அவர்களை கனிவுடன் திருப்பி அனுப்பி விட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு மணிப்பூர் உள்துறை அமைச்சகம்  அறிவுறுத்தியுள்ளது.

Next Story